/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 114 பள்ளிகளில் கழிப்பறை கட்ட... அனுமதி! மூன்று மாதங்களில் பணிகளை முடிக்க உத்தரவு
/
செங்கையில் 114 பள்ளிகளில் கழிப்பறை கட்ட... அனுமதி! மூன்று மாதங்களில் பணிகளை முடிக்க உத்தரவு
செங்கையில் 114 பள்ளிகளில் கழிப்பறை கட்ட... அனுமதி! மூன்று மாதங்களில் பணிகளை முடிக்க உத்தரவு
செங்கையில் 114 பள்ளிகளில் கழிப்பறை கட்ட... அனுமதி! மூன்று மாதங்களில் பணிகளை முடிக்க உத்தரவு
ADDED : டிச 03, 2024 06:11 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், 'துாய்மை பாரத இயக்கம்' சார்பில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 114 துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் கழிப்பறைகள் கட்ட, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கட்டுமானப் பணிகளை மூன்று மாதங்களில் முடித்து, அவற்றை மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என, 731 துவக்கப் பள்ளிகள் மற்றும் 264 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில், சேதமடைந்த கழிப்பறைகள் மற்றும் புதிய கழிப்பறைகள் கட்டித்தர, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் செயல்பாட்டில் உள்ள கழிப்பறைகள் குறித்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பணி மேற்பார்வையாளர், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்து, 136 பள்ளிகளில் கழிப்பறை கட்ட வேண்டியதன் அவசியம் குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர் ஆகியோரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
பின், மாணவர்களின் பயன்பாட்டிற்கு, 114 பள்ளிகளில் புதிய கழிப்பறைகள் கட்டுவது தொடர்பாக, கலெக்டருக்கு முதன்மை கல்வி அலுவலர் கருத்துரு அனுப்பி வைத்தார்.
அதன் நடவடிக்கையாக, பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஊரக வளர்ச்சித் துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும்,'துாய்மை பாரத இயக்கம்' சார்பில், 2024 - 25ம் நிதியாண்டில், 114 பள்ளிகளில் கழிப்பறை கட்ட, மத்திய, மாநில அரசுகள், 5 கோடியே 72 லட்சத்து 55,630 ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தன.
இப்பணிகளை செயல்படுத்த, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கி, கலெக்டர் அருண்ராஜ், கடந்த நவ., 23ம் தேதி உத்தரவிட்டார்.
அதன் பின், பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்படும் என, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மாவட்டத்தில், பள்ளிகளில் கழிப்பறை கட்டும் பணிக்கு,'டெண்டர்' அறிவிப்பு பணிகள் துவங்கியுள்ளன. கட்டுமானப் பணிகளை மூன்று மாதங்களில் முடித்து, கழிப்பறை கட்டடங்களை பள்ளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு.