/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 தடத்தில் மினி பஸ் இயக்க...அனுமதி: 25 ஆண்டுகளுக்குப் பின் கிராமங்களுக்கு சிற்றுந்து இயக்கம்
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 தடத்தில் மினி பஸ் இயக்க...அனுமதி: 25 ஆண்டுகளுக்குப் பின் கிராமங்களுக்கு சிற்றுந்து இயக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 தடத்தில் மினி பஸ் இயக்க...அனுமதி: 25 ஆண்டுகளுக்குப் பின் கிராமங்களுக்கு சிற்றுந்து இயக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 தடத்தில் மினி பஸ் இயக்க...அனுமதி: 25 ஆண்டுகளுக்குப் பின் கிராமங்களுக்கு சிற்றுந்து இயக்கம்
ADDED : மார் 18, 2025 08:57 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 34 வழித்தடங்களில்,'மினி பஸ்' எனும் சிற்றுந்துகள் இயக்க, தனியாருக்கு அனுமதி ஆணை வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து மாவட்டத்தில், 25 ஆண்டுகளுக்குப் பின், சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழகம் முழுதும், கடந்த 1999ம் ஆண்டு, நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு, சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. அதன் பின், கிராமங்களுக்கு இயக்கப்பட்ட சிற்றுந்துகள், கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால், கிராமவாசிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில், நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு, ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ஆட்டோக்களில், சட்ட விதிகளுக்கு புறம்பாக, 10க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் செல்கின்றனர். கிராமங்களுக்குச் செல்லும் ஆட்டோக்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி, பலர் படுகாயமடைகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதையடுத்து, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, புதிய சிற்றுந்து திட்டம் குறித்து, தமிழக அரசிதழில், கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட்டது.
இதுகுறித்து மாவட்டத்தில், கடந்த டிசம்பரில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, கிராமங்களுக்கு சிற்றுந்துகள் அதிகமாக இயக்க வேண்டும் என, கருத்து தெரிவித்தனர்.
இதையேற்று, 50 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கும் புதிய திட்டத்திற்கு, தமிழக அரசு கடந்த ஜன., 24ல் அனுமதி அளித்துள்ளது.
சிற்றுந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கு, மாவட்ட அரசிதழில், கடந்த பிப்., 12ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் செங்கல்பட்டு, தாம்பரம், சோழிங்கநல்லுார் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 34 வழித்தடங்களுக்கு, 103 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அருண்ராஜ் முன்னிலையில், சிற்றுந்துகள் கோரிய விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டன.
இதில், 34 வழித்தடங்களுக்கான அனுமதி ஆணையை உரிமையாளர்களுக்கு, கலெக்டர் வழங்கினார். மேலும், புதிய வழித்தடங்கள் கண்டறிந்து, அந்த இடங்களுக்கு சிற்றுந்துகள் செல்வதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும் என, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
சிற்றுந்துகள் இயக்க உரிமையாளர்களுக்கு, 90 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது. மே 1ம் தேதி முதல், சிற்றுந்துகள் இயங்கும். மாவட்டத்தில், 16 புதிய வழித்தடங்களுக்கு, வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.