/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அயர்லாந்து மதகுருவிற்கு பைபர் சிலை தயாரிப்பு
/
அயர்லாந்து மதகுருவிற்கு பைபர் சிலை தயாரிப்பு
ADDED : அக் 20, 2024 12:23 AM

மாமல்லபுரம்:அயர்லாந்து நாட்டு பூங்காவில் நிறுவுவதற்காக, அந்நாட்டு பாதிரியாரின் 19 அடி உயர பைபர் சிலை, மாமல்லபுரம் சிற்பக் கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்து தலைநகர் டப்ளின் அருகே, விக்டர்ஸ் வே என்ற சிற்பக்கலை பூங்கா, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், விக்டர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
ஹிந்து கடவுள் விநாயகர் நடனமாடுவது, வாத்தியங்கள் இசைப்பது, புத்தகம் வாசிப்பது உள்ளிட்ட தோற்றங்களில், மாமல்லபுரம் தனியார் சிற்பக் கூடங்களில் கற்சிலைகள் வடிக்கப்பட்டு, இப்பூங்காவில் நிறுவப்பட்டன.
அந்நாட்டு பண்டைய செல்டிக் கலாசார மதகுருவான ட்ரூயிட் என்பவரின், 19 அடி உயர பைபர் சிலை, தற்போது நிறுவப்பட உள்ளது. இச்சிலை மாமல்லபுரம் ஆர்ட் ஸ்டுடியோ என்ற சிற்பக் கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
வலது கையில், பிரமிடில் உள்ள கழுகுடன் அமைந்துள்ள கோலை பிடித்து, இடது கையில் பாம்புகளை குவித்து, காலடியில் நரியை நிறுத்திய தோற்றத்தில் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பூம்புகார் விருது பெற்ற சிற்பக் கலைஞர் முருகன் கூறியதாவது:
அயர்லாந்து பூங்காவில் அமையவுள்ள இச்சிலையை செய்வதற்கு, ஓராண்டிற்கு முன் ஆர்டர் அளித்தனர். முதலில் களிமண், அடுத்து பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ஆகியவற்றில், வெவ்வேறு உருவங்களில், மாதிரி சிலை செய்யப்பட்டது.
பூங்கா தரப்பினர் மாதிரியை இறுதி செய்ததும், பைபரில் சிலையின் பாகங்களை செய்தோம். இறுதியாக, சிலை அளவிற்கேற்ப உலோக கம்பி பிரேம் தயாரித்து, அதன் மீது பாகங்களை பொருத்தி, 19 அடி உயரம், 8 அடி அகலத்தில் முழு சிலையை உருவாக்கியுள்ளோம். அயர்லாந்து நாட்டிற்கு, விரைவில் கொண்டு அனுப்ப உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.