/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டம்...முதல்முறை!:ரூ.20 கோடி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பரிந்துரை
/
தாம்பரம் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டம்...முதல்முறை!:ரூ.20 கோடி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பரிந்துரை
தாம்பரம் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டம்...முதல்முறை!:ரூ.20 கோடி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பரிந்துரை
தாம்பரம் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டம்...முதல்முறை!:ரூ.20 கோடி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பரிந்துரை
ADDED : செப் 17, 2024 11:39 PM

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியின் ஆறு ஏரிகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மாடம்பாக்கம், வீரராகவன் ஏரிகளுக்காக 20 கோடிக்கு திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் பிரதானமாக பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, குரோம்பேட்டை வீரராகவன், திருநீர்மலை, மாடம்பாக்கம் உட்பட 14 ஏரிகள் உள்ளன.
சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் வணிக வளாகம், அடுக்குமாடி மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மேற்கண்ட ஏரிகளில் கலப்பது வாடிக்கையானது.
குறிப்பாக, தாம்பரம் சானடோரியம் 'மெப்ஸ்' வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால், திருநீர்மலை ஏரி சுகாதார சீர்கேடு ஏற்படும் இடமாக மாறியது.
ரசாயன கழிவுகள் கலந்ததால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து, அடி பம்புகளில் நுரையுடன் கலந்த தண்ணீர் வந்ததால், பிரச்னை எழுந்தது.
அதேபோல், மாடம்பாக்கம் ஏரியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலப்பதால், ஏரி நீர் மாசடைந்துள்ளது.
இதனால் இங்கிருந்து தாம்பரம், சிட்லப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இங்குள்ள கிணறுகளில் இருந்து வழங்கப்படும் நீரில் துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மாநகராட்சியின் ஒவ்வொரு ஏரியை ஒட்டிய பகுதிகளிலும், இதே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஏரிகளை பாதுகாக்க வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினரும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ஏரிகளில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ஏரி நீரை நன்னீராக மாற்றவும், தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
முதல்முறையாக, ஏரிகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்த பின் ஏரியில் விடவும் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக, பீர்க்கன்காரணை, கடப்பேரி, மாடம்பாக்கம், சேலையூர், வீரராகவன், நெமிலிச்சேரி ஆகிய ஆறு ஏரிகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இப்பணிக்காக 21 லட்சம் ரூபாயையும் ஒதுக்கியுள்ளது.
இந்நிறுவனத்தினர் நடத்திய முதற்கட்ட ஆய்வுக்கு பின், குரோம்பேட்டை வீரராகவன் ஏரி மற்றும் மாடம்பாக்கம் ஏரிக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஏரிகளில் 20 கோடி ரூபாயில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
அரசிடம் இருந்து நிதி கிடைத்தவுடன், 'டெண்டர்' கோரப்பட்டு, இத்திட்டப் பணிகள் துவங்கும் என தெரிகிறது.
இத்திட்டத்தை, ஆறு ஏரிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தினால், அடுத்த கட்டமாக மற்ற ஏரிகளிலும் விரிவாக்கம் செய்ய, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தனியார் நிறுவனத்தினர் நடத்திய ஆய்வில், ஆறு ஏரிகளில் வீரராகவன் மற்றும் மாடம்பாக்கம் ஏரிகளுக்கு மட்டும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
அதில், மேற்கண்ட ஏரிகளுக்கு கழிவுநீர் வரும் வழிகள் எத்தனை, அவற்றை ஒன்றாக இணைத்து ஒரே வழியில் எடுத்துச் செல்வது எப்படி, எந்த இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஏரியிலும் எவ்வளவு கழிவுநீர் கலக்கிறது என்பதை ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல், 15 லட்சம் லிட்டர், 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய சுத்திகரிப்பு மையங்கள் கட்டப்படும். தேவைப்பட்டால், ஒரே இடத்தில் இரு மையங்கள் கட்டப்படும். மேலும், கழிவுநீரை சுத்திகரித்த பின், தண்ணீர் ஏரியில் விடப்படும்.
சுத்திகரிப்பில் கிடைக்கும் கசடுகளை உரமாக பயன்படுத்தலாம். அவற்றை, மாநகராட்சி பூங்காக்களுக்கு பயன்படுத்துவதா அல்லது ஏரியில் பூங்கா அமைத்து அதற்கு உபயோகிப்பதாக என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
அரசிடம் இருந்து, நிதி கிடைத்தவுடன், அனைத்து பணிகளும் துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சீதாராமன், 69, கூறியதாவது:
தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரம் மற்றும் தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. அப்படியிருந்தும், கழிவுநீரை ஏரிகளில் விடுவது தொடர்ந்து நடக்கிறது.
அதேபோல், பாதாள சாக்கடை இல்லாத இடங்களிலும், ஏரிகளில் தான் கழிவுநீர் கலக்கிறது. அதுவும், மழைநீர் வெளியேற்றுவதற்கான கால்வாய் வழியாகவே விடப்படுகிறது. குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் இதே நிலைமை தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
முறையாக செயல்படுத்த வேண்டும்
கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வது வரவேற்கக்கூடியது. இத்திட்டத்தை தொடர்ந்து முறையாக மேற்கொள்ள வேண்டும். பெயருக்காக துவங்கி, அப்படியே விட்டு விடக்கூடாது. மேலும், மாநகராட்சியில் உள்ள அனைத்து ஏரிகளிலும், இத்திட்டத்தை செயல்படுத்த முன்வரவேண்டும்.
எஸ்.மீனாட்சி சுந்தரம், 69,
மூத்த குடிமக்கள் நலச்சங்கம், குரோம்பேட்டை.