/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீர்நிலை பகுதிகளில் 20,000 பனை விதைகள் நடவு: செங்கை தோட்டக்கலை துறை நடவடிக்கை
/
நீர்நிலை பகுதிகளில் 20,000 பனை விதைகள் நடவு: செங்கை தோட்டக்கலை துறை நடவடிக்கை
நீர்நிலை பகுதிகளில் 20,000 பனை விதைகள் நடவு: செங்கை தோட்டக்கலை துறை நடவடிக்கை
நீர்நிலை பகுதிகளில் 20,000 பனை விதைகள் நடவு: செங்கை தோட்டக்கலை துறை நடவடிக்கை
ADDED : அக் 11, 2024 12:31 AM

மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், நிலத்தடி நீரை சேமிக்கவும், மண் அரிப்பை தடுக்கவும், ஏரி உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில், 20,000 பனை விதைகள், 277 பனங்கன்றுகள் நடும் பணி, தோட்டக்கலை துறை சார்பில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழக மாநில மரமான பனை, மாநிலம் முழுதும் வளர்கின்றன. திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் உள்ளன.
அவற்றை தோப்பாக வளர்த்து, அதன் வாயிலாக கிடைக்கும் பனை பொருட்கள் வர்த்தக பயனளிக்கின்றன. பனையிலிருந்து பதநீர், கருப்பட்டி, வெல்லம், கற்கண்டு, நுங்கு என, நமக்கான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன.
அவை மட்டுமின்றி, மரம், ஓலை, நார் ஆகியவையும் நமக்கு மிகுந்த பயனளிக்கின்றன. இனிப்பு சுவைக்கு சர்க்கரை கண்டறியப்படும் முன், நம் முன்னோர், உணவுப்பொருட்கள், சுக்குமல்லி பானம் உள்ளிட்ட பானங்களின் இனிப்பிற்காக, பனங்கருப்பட்டி, பனை வெல்லமே பயன்படுத்தினர்.
கோடை கால புத்துணர்விற்கும், தாகம் தணிக்கவும், பதநீர் அருந்தி, நுங்கு உண்டனர். பனை மரத்தை வீடுகளில் துாண், மேற்கூரை தாங்கி, அதன் ஓலையை கூரைக்கும், விசிறியாகவும் பயன்படுத்தினர்.
விவசாய நிலத்தில், எல்லையை குறிக்கும் அடையாளமாக, வரப்பில் பனை வளர்த்து, பனஞ்சாலை என்றனர். அவை வளர்ந்துள்ள பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் உயரும். மண் அரிப்பு ஏற்படாது. இத்தகைய பலன்களை நமக்கு அளித்து, பனை மரங்கள் நம் வாழ்க்கையுடன் ஒன்றி இருந்தன.
தற்கால இயந்திர வாழ்க்கைச் சூழலில், இனிப்பு சுவைக்கு, சர்க்கரை, வெல்லம், உடல் புத்துணர்விற்கு ரசாயன பானம் ஆகிபவற்றையே யன்படுத்துகிறோம்.
நாம் வசிக்கும் வீடுகள் கான்கிரீட்டாக மாறி, பனை மரம் அவசியமற்ற ஒன்றானது. பனை சார்ந்த தொழில்கள் நலிந்து, பனை விவசாயம் படிப்படியாக அழிகிறது. செங்கல் சூளை உள்ளிட்டவற்றில், பனை மரங்கள் அழிக்கப்பட்டு, விறகாக பயன்படுத்தப்படுகிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ஏரிக்கரையை பலப்படுத்த, முன்னோர் வளர்த்த பனைகளே, தற்போது காணப்படுகின்றன.
விவசாய சாகுபடிக்காக, ஏரியை ஆக்கிரமித்துள்ள விவசாயிகளும், பனையை இடையூறாக கருதி வெட்டி அகற்றுகின்றனர். தனியார் நிலத்தில் உள்ள பனை மரங்களும், படிப்படியாக வெட்டப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில், தன்னார்வ குழுவினர், வருங்கால தலைமுறையினருக்கு பனை மரங்களின் பயன்பாடுகள், அவற்றை பாதுகாப்பது குறித்து உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி, பனை வளர்ப்பிற்காக, தங்களால் இயன்றவரை பனை விதை நடுகின்றனர். தமிழக அரசும், தோட்டக்கலைத் துறை வாயிலாக, பனை மேம்பாட்டு இயக்கமாக, பனை வளர்ப்பை தீவிரப்படுத்தி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடப்பாண்டில், ஏழு வட்டார பகுதிகளில், ஊராட்சிப் பகுதிகளை தேர்வுசெய்து, அங்குள்ள ஏரி, குளம், ஓடை ஆகிய நீர்நிலை பகுதிகளில், 20,000 பனை விதைகள், 277 பனங்கன்றுகளை நடுகிறது.
கலெக்டர் அருண்ராஜ், மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ், திருக்கழுக்குன்றம் அடுத்த புல்லேரி ஊராட்சியில், 100 பனை விதைகள் மற்றும் 30 பனங்கன்றுகள் ஆகியவற்றை, கடந்த செப்., 19ம் தேதி நட்டு, இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு வட்டாரத்திலும், பனை விதை, பனங்கன்று ஆகியவற்றை, குறிப்பிட்ட எண்ணிக்கையில் நட்டு வருகிறோம். வட்டார வளர்ச்சி நிர்வாகம் தேர்வு செய்யும் ஊராட்சிகளில் உள்ள ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில், ஊராட்சி நிர்வாகம் அவற்றை நட்டு வளர்த்து, பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது.
- தோட்டக்கலைத்துறை அலுவலர்,
செங்கல்பட்டு.