/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
20,000 பேர் பணிபுரியும் ஆலத்துார் சிட்கோவில் குற்றங்களை தடுக்க போலீஸ் ரோந்து அவசியம்
/
20,000 பேர் பணிபுரியும் ஆலத்துார் சிட்கோவில் குற்றங்களை தடுக்க போலீஸ் ரோந்து அவசியம்
20,000 பேர் பணிபுரியும் ஆலத்துார் சிட்கோவில் குற்றங்களை தடுக்க போலீஸ் ரோந்து அவசியம்
20,000 பேர் பணிபுரியும் ஆலத்துார் சிட்கோவில் குற்றங்களை தடுக்க போலீஸ் ரோந்து அவசியம்
ADDED : நவ 21, 2025 03:20 AM

திருப்போரூர்: ஆலத்துார் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் வழிப்பறி, மதுபோதை நபர்கள் அட்டகாசத்தால், தொழிலாளர்கள் அச்சமடைகின்றனர். எனவே, தினமும் போலீஸ் ரோந்து வர வேண்டுமென, வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், பழைய மாமல்லபுரம் சாலையில், ஆலத்துார் ஊராட்சி அமைந்துள்ளது.
இங்கு 5,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியைச் சுற்றி வெங்கலேரி, தண்டலம், பண்டிதமேடு, சிறுதாவூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த ஆலத்துார் ஊராட்சியில், 1982ம் ஆண்டு, 200 ஏக்கரில் சிட்கோ தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டது.
சிட்கோ வளாகத்தில், 30க்கும் மேற்பட்ட தனியார் மருந்து தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த வளாகத்தில் பெண்கள் உட்பட 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், வடமாநில தொழிலாளர்களும் அதிக அளவில் பணிபுரிகின்றனர்.
மேலும், இங்கு தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி, அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில், சிட்கோ தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்தது.
அதன்படி இந்த விரிவாக்கத்திற்காக, அரசுக்கு சொந்தமான 67 ஏக்கர் நிலம், சிட்கோ நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த நிலத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு, 115 கோடி ரூபாய் மதிப்பில், 192 தொழில் மனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிட்கோ வளாகத்தில் மர்ம நபர்கள் மதுபோதையில் தொழிலாளர்களை மிரட்டுதல், தாக்குதல், வழிபறியில் ஈடுபடுதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, இரவு பணிக்கு வரும் தொழிலாளர்கள் மற்றும் பணி முடித்து வீடு திரும்பும் தொழிலாளர்களை தாக்கி மொபைல் போன், பணம் பறிப்பது, வெளியே நிறுத்தி வைக்கும் 'பைக்'குகளை திருடிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
மேலும், போதிய மின்விளக்கு வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகளும் சரிவர இல்லை. இதுபோன்ற பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பெண்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குற்ற சம்பவங்களை தடுக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வளாகம் முழுதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மற்ற பாதுகாப்பு கட்டமைப்பையும் ஏற்படுத்த வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

