/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வடகடம்பாடியில் நாளை பொங்கல் சுற்றுலா விழா
/
வடகடம்பாடியில் நாளை பொங்கல் சுற்றுலா விழா
ADDED : ஜன 12, 2024 11:51 PM
மாமல்லபுரம்:சுற்றுலாத்துறை சார்பில், வடகடம்பாடி பகுதியில், நாளை பொங்கல் சுற்றுலா விழா கொண்டாடப்படுகிறது.
மாமல்லபுரத்தில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில், கடந்த டிச. 22 முதல் நாட்டிய விழா நடத்தப்படுகிறது. பல்லவர் சிற்பங்களை காண, சர்வதேச பயணியர் சுற்றுலா வரும் காலத்தில், தமிழக பாரம்பரிய பொங்கல் பண்டிகை களைகட்டுகிறது.
தமிழர் பாரம்பரியம் மற்றும் பண்டிகை கலாசாரத்தை, பயணியரிடம் உணர்த்த, சுற்றுலாத்துறை பொங்கல் சுற்றுலா விழா கொண்டாடுகிறது.
மாமல்லபுரம் அருகாமை கிராமத்தில், விழா நடத்துவது நீண்டகால வழக்கம். கடந்த ஆண்டு, முட்டுக்காடு பகுதி, தனியார் சுற்றுலா வளாகத்தில், நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு கிராமத்தில் கொண்டாடுமாறு, சுற்றுலா ஆர்வலர்கள், சுற்றுலாத் துறையினரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து நாளை காலை, மாமல்லபுரம் அடுத்த, வடகடம்பாடி பகுதியில் விழாவை கொண்டாடுகிறது.
துறையினர், மாமல்லபுரத்திலிருந்து, விழா பகுதிக்கு சர்வதேச பயணியரை அழைத்துச்செல்ல கிராமத்தினர் பாரம்பரிய முறையில் வரவேற்கின்றனர். 10:00 மணி முதல், 1:00 மணி வரை, அவர்களுக்கு பாரம்பரிய கிராமியக் கலைகள் நடத்தி, பானையில் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர்.