/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'தாயுமானவர்' திட்டத்தில் இடர்பாடுகள் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல்
/
'தாயுமானவர்' திட்டத்தில் இடர்பாடுகள் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல்
'தாயுமானவர்' திட்டத்தில் இடர்பாடுகள் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல்
'தாயுமானவர்' திட்டத்தில் இடர்பாடுகள் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல்
ADDED : நவ 03, 2025 10:44 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'தாயுமானவர்' திட்டத்தின்படி முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவதில், பல இடர்பாடுகள் உள்ளதால், பொருட்களை முறையாக வினியோகம் செய்ய முடியவில்லை என, ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும், 'தாயுமானவர் திட்டம்' கடந்த ஆகஸ்டில் துவக்கப்பட்டது.
புகார் ஒவ்வொரு ரேஷன் கடையிலும், 40 முதல் 50 பயனாளிகள், இதன் வாயிலாக பயன்பெற்று வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள், மாதத்தில் ஒரு நாள், இந்த பணியை மேற்கொள்கின்றனர். அன்றைய தினம் கடைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின்படி, முதியோர்களின் வீடுகளுக்கே சென்று, பொருட்களை நேரடியாக வினியோகம் செய்யும் போது, பல்வேறு இடர்பாடுகள் உள்ளதால், ஒரே நாளில் பொருட்களை வினியோகம் செய்ய முடியவில்லை என, ரேஷன் கடை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:
தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று பொருட்களை நேரடியாக வினியோகம் செய்ய, கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
விடுமுறை இதனால், மாதத்தில் ஒருநாள் மட்டும், இந்த பணியை நாங்களே செய்து வருகிறோம். அன்றைய தினம், கடைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
எந்த நாளில் பொருட்களை வினியோகம் செய்ய உள்ளோம் என்பது குறித்து, பயனாளிகளின் மொபைல் போனுக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
ஆனால், பலரின் மொபைல் போன், வேறு நபரின் கையில் உள்ளது. தவிர, பல பயனாளிகள், மொபைல் போன் நம்பரையே மாற்றி விட்டனர். புதிய எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்காததால், அவர்களுக்கு இந்த தகவல் தெரிவதில்லை.
ஒவ்வொரு வீட்டிற்கு செல்லும் போதும், பயனாளிகளின் கைரேகை பதிவுகளை பெற்ற பின்னரே, பொருட்களை வழங்க முடியும். இப்படி கைரேகை பெறும் போது, பல முதியோர்களின் கைரேகை பதிவுகளை, கருவி உடனடியாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
காலதாமதம் இதனால், கால தாமதம் ஏற்பட்டு, ஒரே நாளில் அனைவருக்கும் பொருட்களை வழங்க முடியாத நிலை உருவாகிறது.
விடுபட்டவர்களுக்கு வேறு நாளில் வழங்க வேண்டுமானால், அதற்கான வாகன வசதி கிடையாது.
மாதத்தில் ஒரு நாள் மட்டுமே வாகனம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனால், விடுபட்ட பயனாளிகளுக்கு, வேறு ஏதாவது நாளில் பொருட்களை வழங்க முடியவில்லை.
ஒவ்வொரு கடையிலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளில், 10க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், வீடு மாறி சென்று, வேறோர் இடத்தில் வசிக்கின்றனர்.
தனி குழு சிலர், வேறு மாவட்டத்திற்கே இடம் மாறி சென்றுவிட்டனர். இவர்களுக்கு பொருட்களை எப்படி வினியோகம் செய்வது? தவிர, சில குடும்ப அட்டைதாரர்கள் மரணமடைந்த நிலையில், அந்த தகவலை வட்ட வழங்கல் துறைக்கு தெரிவிக்காமல், அவர்களின் உறவினர்கள் தொடர்ந்து ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதில், மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் பட்டியலும் உண்டு.
இப்படி, தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளதால், ஒரே நாளில் அனைவருக்கும் பொருட்களை வழங்க முடியவில்லை.
எனவே, இத்திட்டத்தின்படி ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய, தனி குழு அமைத்து, தேவையான ஊழியர்களை நியமித்திட்டால் மட்டுமே, பொருட்களை முறையாக வினியோகம் செய்ய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

