/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேகவதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம்
/
வேகவதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம்
வேகவதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம்
வேகவதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம்
ADDED : நவ 03, 2025 10:43 PM

காஞ்சிபுரம்:  வேகவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆற்றை ஆக்கிரமித்து கட்டியுள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாலாற்றின் கிளை ஆறான வேகவதியில், 1,400 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், வணிக வளாகம், மரம் அறுக்கும் ஆலை என வணிக ரீதியிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்ற வேண்டிய வருவாய் துறை, நீர் ஆதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகளின் மெத்தனப்போக்கு காரணமாக, இன்று வரை அகற்றப்படாமலேயே உள்ளன.
ஆக்கிரமிப்பாளர்களுக்காக, 200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில், மறுகுடியமர்வு செய்ய, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், கீழ்கதிர்பூர் கிராமத்தில் உள்ள குடியிருப்புகள் மற்ற பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டு, 2,112 வீடுகளும் நிரம்பி விட்டன.
இதனால், வேகவதி ஆக்கிரமிப்பாளர்களை மாவட்ட நிர்வாகத்தால் இன்று வரை அகற்ற முடியாமல் உள்ளது. வெறும் 78 வீடுகள் மட்டும் சில நாட்கள் முன் அகற்றப்பட்டன. ஆனால், 1,000 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அப்படியே உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின்போதும் இந்த ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து, பலரும் பாதிக்கின்றனர்.
ஆக்கிரமிப்பு வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு தனியாக முகாம் அமைத்து அவர்களை பராமரிக்க வேண்டியுள்ளது. கடந்த 2021ல், வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பலரும் பாதிக்கப்பட்டனர். அதுபோல், தற்போதும் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாலாற்றிலிருந்து ஓச்சேரி ரெகுலேட்டர் வழியாக தாமல் ஏரிக்கு, வினாடிக்கு 300 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. தாமல் ஏரியிலிருந்து வரும் உபரி நீர், திருப்புட்குழி ஏரிக்கு சென்று, பின் வேகவதி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடிநீர் கலக்கிறது. இதனால், வேகவதியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் நீர் வரத்து மெல்ல அதிகரிப்பதால், ஆற்றை ஆக்கிரமித்து கட்டியிருக்கும் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

