/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் ஏகாட்டூரில் ஒருநாள் பயிற்சி கூட்டம்
/
வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் ஏகாட்டூரில் ஒருநாள் பயிற்சி கூட்டம்
வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் ஏகாட்டூரில் ஒருநாள் பயிற்சி கூட்டம்
வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் ஏகாட்டூரில் ஒருநாள் பயிற்சி கூட்டம்
ADDED : மார் 05, 2024 11:40 PM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் தனியார் ஹோட்டலில், மாநில திட்டக் குழுவின் வாயிலாக, பின்தங்கிய வட்டாரங்களை மேம்படுத்துதல் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு திட்டங்களை கொண்டு செல்வதற்காக, மண்டல அளவிலான வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் செயல்பாடு குறித்த ஒரு நாள் பயிற்சி கூட்டம், நேற்று நடந்தது.
பயிற்சியை, கலெக்டர்அருண்ராஜ் துவக்கி வைத்தார். இதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய அளவிலான உயர் அதிகாரிகள், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:
மாநிலத்தில் பின் தங்கிய வட்டாரங்கள் கண்டறியப்பட்டு, அந்த வட்டாரத்தில் அரசுத் திட்டங்களை ஒன்றிணைத்து, ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பின்தங்கிய வட்டாரமாக, லத்துார் வட்டாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பின்தங்கிய வட்டாரங்களை தேர்ந்தெடுத்து, அந்தந்த வட்டாரத்தில் பல அரசுத் துறைகள் மற்றும் திட்டங்களை ஒன்றிணைத்து, ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லா அரசுத் துறைகளையும் ஒருங்கிணைத்து, அவர்கள் கூறும் கருத்துக்களின் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
எடுத்துக்காட்டாக, பள்ளி கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டம், சுகாதாரத்துறையில் ஆரம்ப சுகாதார நிலையத்திட்டம் ஆகியவை உள்ளன.
பின்தங்கிய வட்டாரங்களில், வசதிகள் குறைவாகத் தான் இருக்கும். மக்கள் வெகுதுாரம் சென்று தான் அரசு திட்டங்களை, உதவிகளை, கட்டமைப்புகளை பயன்படுத்த முடிகிறது. இவற்றை ஒருங்கிணைத்து கொண்டுவருவது தான் இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
வேளாண் துறையை மேம்படுத்துவது குறித்து, பல கேள்விகளை நாம் நமக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் நல்ல திட்டத்தை வகுத்து, அரசிற்கு சமர்ப்பித்து, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாநில திட்டக் குழு உறுப்பினர் செயலர் சுதா, மாநில திட்டக் குழு கூடுதல் உறுப்பினர் விஜயபாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

