/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குப்பை எரிப்பதை கண்டித்து மறியல் ஊரப்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல்
/
குப்பை எரிப்பதை கண்டித்து மறியல் ஊரப்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல்
குப்பை எரிப்பதை கண்டித்து மறியல் ஊரப்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல்
குப்பை எரிப்பதை கண்டித்து மறியல் ஊரப்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல்
ADDED : மார் 17, 2024 01:54 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காரணை புதுச்சேரி பிரதான சாலையில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கும் கட்டடம் உள்ளது.
இந்த கட்டடத்தை சுற்றியுள்ள காலி இடத்தில், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், தற்காலிகமாக கொட்டப்பட்டு வந்தன.
மேலும், இங்கு சேகரித்த குப்பை உடனுக்குடன் அகற்றாமல், மலை போல் தேங்கியுள்ளன. இதனால் துர்நாற்றம், கொசுத் தொல்லை, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து ஊரப்பாக்கம் ஊராட்சி, காரணை புதுச்சேரி பிரதான சாலையில் வசிப்போர் மற்றும் கடை உரிமையாளர்கள், ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் மனு அளித்தனர்.
அதன்பின்னும் தொடர்ந்து ஊரப்பாக்கம் ஊராட்சி சார்பில் குப்பையை கொட்டி வந்தனர். மேலும், கொட்டிய குப்பையை அகற்றாமல், அங்கு தீயிட்டுக் கொளுத்தி வந்தனர்.
இதனால், 24 மணி நேரமும் கரும்புகை வெளியேறி, சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்போர் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தனர்.
இதை தொடர்ந்து, தேங்கிய குப்பையை அகற்றக்கோரியும், தீயிட்டு கொளுத்துவதை நிறுத்தக்கோரியும், ஊரப்பாக்கம் பகுதிவாசிகள் காரணை புதுச்சேரி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிளாம்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அதன்பின், போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். இதனால், நேற்று காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

