/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரியில் கழிவுநீர் கொட்டிய வாகனத்தை மறித்து போராட்டம்
/
ஏரியில் கழிவுநீர் கொட்டிய வாகனத்தை மறித்து போராட்டம்
ஏரியில் கழிவுநீர் கொட்டிய வாகனத்தை மறித்து போராட்டம்
ஏரியில் கழிவுநீர் கொட்டிய வாகனத்தை மறித்து போராட்டம்
ADDED : நவ 30, 2024 12:50 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஏரியில், ஐந்து கிணறுகள் அமைத்து, மின் மோட்டார்கள் வாயிலாக, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, தினமும் 18 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஏரியின் கரையோரம் மற்றும் சுற்றியுள்ள விவசாய நிலங்கள், நீர்நிலை பகுதிகளில், தொடர்ந்து தனியார் லாரிகள் வாயிலாக, கழிவு நீர் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால், இப்பகுதியில் உள்ள கிணற்று நீர் மாசடைந்து, இப்பகுதிவாசிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, நம் நாளிதழில், சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
நேற்று காலை பெருமாட்டுநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிவாக்கத்தில் இருந்து, தர்காஸ் செல்லும் சாலையில், கழிவு நீர் ஏற்றி வந்த லாரி, சாலையோரம் கழிவு நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தது.
இதைக் கண்ட அப்பகுதிவாசிகள், கழிவுநீர் வாகனத்தை சுற்றி மறித்து, ஊராட்சி தலைவர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.
அப்போது, இப்பகுதியில் தொடர்ந்து கழிவுநீரை கொட்டி வரும் வாகனத்தை பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் போலீசாரிடம் வலியுறுத்தினர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
பொதுமக்கள் கழிவு நீர் வாகனத்தை பிடித்து வைத்து, தகவல் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்டபோது, வாகனத்தின் உரிமையாளர் வருத்தம் தெரிவித்து, இனிமேல் இப்பகுதியில் கொட்டுவதில்லை என உறுதியளித்தார்.
அதைத்தொடர்ந்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளோம். மீண்டும் இப்பகுதியில் கழிவு நீரை கொட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.