/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தெப்பக்குளம் அருகே காரிய மண்டபம் பீர்க்கங்காரணையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு
/
தெப்பக்குளம் அருகே காரிய மண்டபம் பீர்க்கங்காரணையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு
தெப்பக்குளம் அருகே காரிய மண்டபம் பீர்க்கங்காரணையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு
தெப்பக்குளம் அருகே காரிய மண்டபம் பீர்க்கங்காரணையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு
ADDED : மார் 15, 2025 09:31 PM
பெருங்களத்துார்:தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலம் பீர்க்கன்காரணையில், ஆதிகாரணீஸ்வரர், அதை ஒட்டி காரணீஸ்வரர் என்ற இரண்டு தனியார் கோவில்கள் உள்ளன.
இரு கோவில்களும், ஒரு தர்மகர்த்தாவின் கீழ் செயல்படுகின்றன. ஆதிகாரணீஸ்வரர் கோவில் வாசலில், காரிய மண்டபம் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், கோவில் தெப்பக்குளத்தின் நடைபாதையில், புதிதாக காரிய மண்டபம் கட்டப்படுகிறது. இதற்கு, காரணீஸ்வரர் கோவில் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காரிய மண்டபம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் கூறியதாவது:
ஆதிகாரணீஸ்வரர் கோவிலில், ஏற்கனவே காரிய மண்டபம் உள்ளது. அப்படியிருக்கையில், தெப்பக்குளத்தின் அருகே நடைபாதையை ஆக்கிரமித்து காரிய மண்டபம் கட்டுவது அவசியமற்றது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கல்பட்டு கலெக்டர், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் வரை மனு கொடுத்துள்ளோம்.
இருப்பினும் காரிய மண்டபம் கட்டப்படுகிறது. இதனால், தெப்பக்குளத்தின் தன்மை மாறிவிடும். அதனால், இதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆதரவு தெரிவிப்போர் கூறியதாவது:
காரிய சடங்கு நடக்கும் போது, பானை, துணி உள்ளிட்ட பொருட்களை கோவில் வாசலிலேயே உடைத்தும், வீசிவிட்டும் செல்கின்றனர். சுத்தம் செய்வதும் இல்லை.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒருவித சங்கடத்திற்கு ஆளாகின்றனர். பக்தர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கவே, குளத்தின் ஒரு பகுதியில் காரிய மண்டபம் கட்டப்படுகிறது.
தர்மகர்த்தா உள்ளிட்ட அனைவரிடமும் அனுமதி பெற்று, பொதுமக்கள் பங்களிப்புடன் காரிய மண்டபம் கட்டப்படுகிறது. தற்போதுள்ள காரிய மண்டபம், கோவில் பொருட்களை வைக்க பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காரிய மண்டபம் கட்டும் விஷயத்தில், இரண்டு கோவில்களின் தரப்பினரிடையே நிலவும் பிரச்னையால், பீர்க்கன்காரணை பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.