/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையை சீரமைக்க கோரி குன்னத்துாரில் மறியல்
/
சாலையை சீரமைக்க கோரி குன்னத்துாரில் மறியல்
ADDED : ஆக 08, 2025 02:16 AM

பவுஞ்சூர்:சேதமான சாலையை சீரமைக்க கோரி, குன்னத்துார் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பவுஞ்சூர் அடுத்த மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னத்துார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
செய்யூர் - படாளம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து, குன்னத்துார் கிராமத்திற்குச் செல்லும் 2 கி.மீ., தார்ச்சாலை உள்ளது.
இந்த சாலை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
நாளடைவில் சேதமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
சாலையை சீரமைத்து தரக் கோரி, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, கிராமத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதைக் கண்டித்து, குன்னத்துார் கிராமத்தினர் 100க்கும் மேற்பட்டோர், செய்யூர் - படாளம் சாலையில், நேற்று காலை 11:00 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் வட்டாட்சியர் பாரதி மற்றும் செய்யூர் காவல் ஆய்வாளர் பாபு ஆகியோர், அவர்களிடம் பேச்சு நடத்தினர்.
சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைந்து சாலை அமைக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.
இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.