/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மானிய விலையில் விவசாயிகளுக்கு உரம் வழங்கல்
/
மானிய விலையில் விவசாயிகளுக்கு உரம் வழங்கல்
ADDED : ஜன 27, 2025 11:18 PM
மதுராந்தகம்,
மதுராந்தகம் வட்டாரத்தில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் நெற்பயிருக்கு மானியத்தில், 'ஜிங்க் சல்பேட்' வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மதுராந்தகம் வேளாண்மை உதவி இயக்குனர் நெடுஞ்செழியன் கூறியதாவது:
நெற்பயிருக்கு, 'ஜிங்க் சல்பேட்' இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்து ஆகும்.
ஜிங்க் சல்பேட் பற்றாக்குறை இருந்தால், இலையின் அடி பாகத்தில் நடு நரம்பின் இருபுறமும் பட்டையான மஞ்சள் நிறக்கோடுகள் தோன்றும், சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கீழ் இலைகளில் காணப்படும், இலைப் பரப்பு குறைந்துவிடும், மணி பிடித்தல் காலதாமதமாகும், வளர்ச்சி சீராக இருக்காது.
இதனால், ஜிங்க் சல்பேட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்திட, மண்ணில் அடியுரமாக 25 கிலோ ஜிங்க் சல்பேட் இடவேண்டும். 5 கிராம் ஜிங்க் சல்பேட்டை, ஒரு லிட்டர் நீரில் கரைத்து, தெளிப்பான் பயன்படுத்தி, இலை வழியாக 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
தற்போது, மதுராந்தகம் மற்றும் புக்கத்துறை வேளாண் விரிவாக்க மையங்களில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், ஜிங்க் சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ வழங்கப்படுகிறது. 10 கிலோ ஜிங்க் சல்பேட்டின் மொத்த விலை 691 ரூபாய், விவசாயிகளுக்கு 250 ரூபாய் மானியம் போக, 441 ரூபாய் விலையில் வழங்கப்படுகிறது.
எனவே, மதுராந்தகம் வட்டார நெல் விவசாயிகள் வாங்கி பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

