/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு வழங்கிய மாற்று இடத்திற்கு பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு
/
அரசு வழங்கிய மாற்று இடத்திற்கு பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு
அரசு வழங்கிய மாற்று இடத்திற்கு பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு
அரசு வழங்கிய மாற்று இடத்திற்கு பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு
ADDED : அக் 15, 2025 10:02 PM
வண்டலுார்:வண்டலுாரில், அரசு வழங்கிய மாற்று நிலத்திற்கு பட்டா வழங்காமல், அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்வதால், ஆறு குடும்பத்தினர், 15 ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.
வண்டலுார் ஊராட்சியில், ஜி.எஸ்.டி., சாலையுடன் வாலாஜாபாத் சாலையை இணைக்க, கடந்த 2010ல் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு திட்டம் வகுக்கப்பட்டது.
அதன்படி, மேம்பால கட்டுமானத்திற்காகவும், வண்டலுார் - வாலாஜாபாத் சாலையை விரிவாக்கம் செய்யவும், சாலையோரம் இருந்த நிலங்கள், வீடுகள் அரசால் கையகப்படுத்தப்பட்டன.
அதன்படி, வண்டலுார் - வாலாஜாபாத் சாலை, எண் 2 மனைப் பிரிவில் வசித்த ஆறு குடும்பத்தாரின் வீடு மற்றும் நிலங்கள் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையால் கையகப்படுத்தப்பட்டது.
இக்குடும்பத்தாருக்கு, மாற்று இடமாக, வண்ட லூர், எம்.ஜி.ஆர்., தெருவில், தலா இரண்டு சென்ட் நிலம் வழங்கப்பட்டது.
ஆனால், அரசால் வழங்கப்பட்ட அந்த நிலத்திற்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால், ஆறு குடும்பத்தாரும், வங்கி கடன் உள்ளிட்ட சேவையை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து அக்குடும்பத்தினர் கூறியதாவது:
நாங்கள், 40 ஆண்டு களுக்கும் மேலாக வசித்து வந்த எங்கள் பூர்வீக வீட்டையும், நிலத்தையும், சாலை விரிவாக்கத்திற்காக, கடந்த 2010ல், தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை கையகப் படுத்தியது.
அந்த நிலத்திற்கு மாற்றாக, வண்டலுார் ஊராட்சி, வார்டு 5க்கு உட்பட்ட கிராம நத்தம், சர்வே எண் 119/2ல், ஆறு குடும்பத்தாருக்கும் தலா இரண்டு சென்ட் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், வீடு கட்ட, எவ்வித நிதி உதவியும் வழங்கவில்லை.
வீடு கட்ட நிதி உதவி கேட்டபோது, எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்திற்கு,'ஆறு மாதங்களுக்குள் பட்டா வழங்கப்பட்டு விடும். அதன் பின், வங்கிக் கடன் பெற்று வீடு கட்டிக் கொள்ளுங்கள்' என அதிகாரிகள் கூறினர். ஆனால், பட்டா வழங்கப்படவில்லை.
இதனால், நகை அடமானம் மற்றும் உறவினர்களிடம் கடன் பெற்று, எங்கள் சொந்த பணத்தில் வீடு கட்டினோம்.
பின், கடனை அடைப்பதற்காக வங்கியில் வீட்டு அடமான கடன் பெற விண்ணப்பித்தபோது, பட்டா இருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படும் என, வங்கி தரப்பில் கூறப்பட்டது.
எனவே, பட்டா வழங்கும்படி வட்டாட்சியர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் மனு அளித்தோம். இதுவரை பட்டா வழங்க வில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.