/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் நீதிமன்றத்துடன் 10 கிராமங்கள்... இணைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு அமலானது
/
தாம்பரம் நீதிமன்றத்துடன் 10 கிராமங்கள்... இணைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு அமலானது
தாம்பரம் நீதிமன்றத்துடன் 10 கிராமங்கள்... இணைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு அமலானது
தாம்பரம் நீதிமன்றத்துடன் 10 கிராமங்கள்... இணைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு அமலானது
ADDED : அக் 15, 2025 10:05 PM
தாம்பரம்: தாம்பரம் தாலுகாவில் அடங்கிய 10 கிராமங்களை, தாம்பரம் நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்ற, பல ஆண்டுகள் போராட்டத்தின் பலனாக, ஆலந்துார் நீதிமன்றத்தில் நடந்து வந்த மேடவாக்கம் உள் வட்டத்தில் உள்ள ஏழு கிராமங்களும், மாடம்பாக்கம் உள் வட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களும் தாம்பரம் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டு, சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு உடனே அமல்படுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒன்பது தாலுகாக்கள் உள்ளன. ஒவ்வொரு தாலுகாவிற்கும், ஒரு நீதிமன்றம் இயங்கி வருகிறது. நீதிமன்றங்களை பொறுத்தவரை, அந்தந்த தாலுகாவில் உள்ள வழக்குகள், அந்தந்த நீதிமன்றங்களில் தான் நடக்கின்றன.
போராட்டம் ஒவ்வொரு தாலுகாவிற்கும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் இருக்க வேண்டும். தாம்பரம் தாலுகாவில், 1994ம் ஆண்டு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
இத்தாலுகாவில், தாம்பரம், சிட்லப்பாக்கம், மேடவாக்கம், மாடம்பாக்கம் என, நான்கு உள் வட்டங்கள் உள்ளன.
தாம்பரம், சிட்லப்பாக்கம் உள் வட்டங்களில் உள்ள அனைத்து வழக்குகளும், தாம்பரம் நீதிமன்றத்தில் நடக்கின்றன. மேடவாக்கம் உள் வட்டத்தில் உள்ள எட்டு கிராமங்களில், வேங்கைவாசல் கிராமத்திற்கான வழக்கு மட்டும், தாம்பரத்தில் நடக்கிறது. மற்ற ஏழு கிராமங்களில் உள்ள வழக்குகள், ஆலந்துார் நீதிமன்றத்தில் நடக்கின்றன.
இதேபோல், மாடம்பாக்கம் உள் வட்டத்தில் உள்ள மூன்று கிராமங் களின் வழக்குகள், ஆலந்துார் நீதிமன்றத்தில் நடக்கின்றன.
இதை சரிசெய்து, 10 கிராமங்களின் வழக்குகளை, தாம்பரம் நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்று, வழக்கறிஞர்கள், மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
தாம்பரத்தில் தாக்கல் இந்நிலையில், வழக்கறிஞர்களின் பல ஆண்டு போராட்டத்திற்கு பலனாக, அந்த 10 கிராமங்களும், தாம்பரம் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதற்கான உத்தரவை கடந்த 6ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த உடேன அமல்படுத்தப்பட்டது. அதனால், இனி அக்கிராமங்களின் வழக்குகள், தாம்பரத்திலேயே தாக்கல் செய்யப்படும்.
அதேபோல், தற்போது ஆலந்துார் நீதிமன்றத்தில் நடந்து வரும் அக்கிராமங்களின் வழக்குகளும், தாம்பரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும்.
இது குறித்து வழக்கறிஞர்கள் கூறியதாவது:
தாம்பரம் தாலுகா பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விட்டது. அதே நேரத்தில், பல்லாவரம் தாலுகாவில் அடங்கிய, 3-7 வருட தண்டனை அளிக்கப்படும் கிரிமினல் வழக்குகள், தாம்பரம் சார்பு நீதிமன்றத்தில் நடக்கின்றன. ஆனால், சிவில் வழக்கு, ஆலந்துார் நீதிமன்றத்தில் நடக்கிறது. மூன்று வருடத்திற்கு கீழ் தண்டனை வழக்குகள், பல்லாவரம் நீதிமன்றத்தில் நடக்கின்றன.
சிவில் வழக்கு ஒரே பிரச்னைக்கு மூன்று நீதிமன்றங்களில் வழக்கு நடப்பதால், வழக்காடிகளும், வழக்கறிஞர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அதனால், ஆலந்துார் சார்பு நீதிமன்றத்தில் நடக்கும் பல்லாவரம் சிவில் வழக்குகளை, தாம்பரம் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றினால், பல்லாவரம் தாலுகா மக்களுக்கு வசதியாக இருக்கும்.
மேலும், பல்லாவரம்- தாம்பரம் நீதிமன்றங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவதாலும், பல்லாவரத்தை ஒட்டியே, தாம்பரம் இருப்பதாலும், வழக்காடிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் சிரமம் ஏற்படாது. வழக்கும் விரைந்து முடிக்க ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.