/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
15 ஆண்டாக ரயில்வே மேம்பால பணி...மந்தம்!:நிர்வாக குளறுபடியால் தொடரும் இழுபறி
/
15 ஆண்டாக ரயில்வே மேம்பால பணி...மந்தம்!:நிர்வாக குளறுபடியால் தொடரும் இழுபறி
15 ஆண்டாக ரயில்வே மேம்பால பணி...மந்தம்!:நிர்வாக குளறுபடியால் தொடரும் இழுபறி
15 ஆண்டாக ரயில்வே மேம்பால பணி...மந்தம்!:நிர்வாக குளறுபடியால் தொடரும் இழுபறி
ADDED : மே 07, 2024 11:51 PM

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலப் பணி, 15 ஆண்டுகளாக மந்தகதியில் நடந்து வருகிறது. 2008ல் துவங்கப்பட்ட கட்டுமானப் பணி, நிர்வாக குளறுபடி, ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்னும் முடியாததால், புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாகியுள்ளது.
செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில், வளர்ந்து வரும் முக்கிய நகரம் சிங்கபெருமாள் கோவில். சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, இங்கு வந்து செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இங்கு, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஆட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை, இந்த சாலையில் அதிக அளவில் கடக்கின்றன.
இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கடந்த தி.மு.க., ஆட்சியில், 2008ம் ஆண்டு ரயில்வே மேம்பால பணிகள் துவங்கப்பட்டன.
கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, பல்வேறு காரணங்களால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
மீண்டும், 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பு ஏற்ற பின், புதிதாக டெண்டர் விடப்பட்டு, 138.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2021 நவம்பர் மாதம், நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தலைமையில், பூமி பூஜை போடப்பட்டது.
துவக்கத்தில் வேகமாக நடைபெற்ற பணிகள், தற்போது மந்தமாக நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேம்பால கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களை, வருவாய் துறையினர் கையகப்படுத்தி, நெடுஞ்சாலை துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இருப்பினும், இருபுறமும் உள்ள மின் கம்பங்கள், தனியார் தொழிற்சாலை அருகில் மேம்பால பணிகளுக்கு இடையூறாக உள்ள மின்மாற்றி உள்ளிட்டவற்றை மாற்றி அமைக்கும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளன.
செங்கல்பட்டு பாலாற்றில் இருந்து, கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள், பூமிக்கு அடியில் செல்கின்றன. அந்த குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது.
தாம்பரம் மார்க்கமாக செல்லும் பகுதியில், 80 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த பகுதியில், ரவுண்டானா துாண் அமைக்கும் இடத்தில் பணிகள் நடந்த போது, 30 ஆண்டுகளுக்கு முன், இங்கு விவசாய கிணறு இருந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக, துாண் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, ஐ.ஐ.டி., குழுவினரிடம் திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.
தற்போது, அந்த கோப்பு நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகளின் கையெழுத்திற்காக, நான்கு மாதங்களாக காத்திருப்பில் உள்ளது.
இந்த பணிகள் நிறைவடைந்தால், பெருங்களத்துார் மேம்பாலத்தின் ஒரு பகுதியை திறந்தது போல, இந்த மேம்பாலத்தையும் ஒரு பகுதி போக்குவரத்திற்காக திறக்க முடியும்.
இதனால், 80 சதவீத போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, விரைந்து மேம்பால பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தாம்பரம் மார்க்கத்தில் ரவுண்டானா துாண் அமைய உள்ள பகுதிக்கு அனுமதி கிடைத்ததில் இருந்து, நான்கு மாதங்களில் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்த்தோம்.
இடைப்பட்ட காலத்தில், மழைநீர் வடிகால் அமைப்பு, சர்வீஸ் சாலை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இருபுறமும் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்ட பின், மீண்டும் பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நான் 10வது படித்த போது, இந்த ரயில்வே மேம்பால பணிகள் துவங்கப்பட்டன. தற்போது, கல்லுாரி முடித்து, திருமணமாகி, என் குழந்தையை பள்ளியில் சேர்த்து விட்டேன். ஆனால், இன்னும் இந்த பாலம் பயன்பாட்டிற்கு வரவில்லை. தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- எஸ்.ஷியமளாதேவி,
சிங்கபெருமாள் கோவில்.
ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட்டை கடக்க, 20 - 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. அடிக்கடி ரயில்வே கேட் பழுதடைந்து விடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
- கோ.கணேசன்,
சிங்கபெருமாள் கோவில்.

