/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயில்வே 'பார்க்கிங்' சாலை அடைப்பு: வேளச்சேரியில் கடும் நெரிசல்
/
ரயில்வே 'பார்க்கிங்' சாலை அடைப்பு: வேளச்சேரியில் கடும் நெரிசல்
ரயில்வே 'பார்க்கிங்' சாலை அடைப்பு: வேளச்சேரியில் கடும் நெரிசல்
ரயில்வே 'பார்க்கிங்' சாலை அடைப்பு: வேளச்சேரியில் கடும் நெரிசல்
ADDED : ஜூலை 02, 2025 11:33 AM

சென்னை: சென்னை, வேளச்சேரி 'பார்க்கிங்' சாலையை திடீரென அடைத்ததால், வேளச்சேரியில் உள்ள பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஆதம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆலந்துார் சுற்றுவட்டார பகுதிவாசிகள், 80 அடி அகல வேளச்சேரி ரயில்வே சாலையை பயன்படுத்தி, பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், ஓ.எம்.ஆர்., உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
ரயில்வே சாலையில் நுழையும் பகுதி, 50 அடி அகல இருவழிப்பாதை. இதை ஒட்டி, ரயில்வே நிர்வாகம், 1.20 ஏக்கர் இடத்தில், 'புட் ஸ்ட்ரீட்' அமைத்துள்ளது.
இங்கு வரும் வாகனங்களால், நுழையும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ரயில்வே பார்க்கிங் சாலை வழியாக இலகுரக வாகனங்கள் விடுப்பட்டன. இந்நிலையில், இரு தினங்களுக்குமுன், பார்க்கிங் சாலை மூடப்பட்டது. இதனால், 50 அடி அகல நுழையும் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், வேளச்சேரி - தாம்பரம் சாலை வரை நீடிக்கிறது. 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் அவ்வழியாக செல்வோர் நெரிசலில் சிக்கிக் கொள்கின்றனர். ரயில்வே பார்க்கிங் சாலையை திறந்துவிட, வேளச்சேரி பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து வேளச்சேரி பகுதி நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ததால், அங்கு முன்பை விட நெரிசல் கடுமையாக உள்ளது. 'புட் ஸ்ட்ரீட்' அமைத்த இடத்தில், வேளச்சேரி பேருந்து நிலையம் அமைத்தால், பேருந்து, ரயில் பயணியருக்கு வசதியாக இருக்கும்; போக்குவரத்து நெரிசலும் குறையும்.
ரயில்வேயிடம் பேசி, பேருந்து நிலையம் அமைக்க அனுமதி வாங்குங்கள் என, 10 ஆண்டுகளாக துறை அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்துள்ளோம். யாரும் கண்டுகொள்ளவில்லை. 'புட் ஸ்ட்ரீட்' ஒப்பந்தம் எடுத்தவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், மக்கள் பிரதிநிதிகள் மவுனமாகினர்.
இன்று, வேளச்சேரியில் உள்ள எந்த பிரதான சாலையில் சென்றாலும், நெரிசலில் சிக்க வேண்டி உள்ளது. பார்க்கிங் சாலையையும் அடைக்கப்பட்டதால், வேளச்சேரியில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தரமணியில் புதிய ஐ.டி., நிறுவனங்கள் அதிகரித்ததால், பல்வேறு பகுதியில் இருந்து வேளச்சேரி வழியாக செல்கின்றனர். வாகன போக்குவரத்துக்கு ஏற்ற சாலை வசதி இல்லை. ரயில்வே சாலை, விஜயநகர் சந்திப்பு, தரமணி ரவுண்டானா ஆகிய இடங்களில் போலீசாரை நிறுத்தியும், நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே ஆகிய துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, சாலை வசதியை மேம்படுத்த வேண்டும்.
- போக்குவரத்து போலீசார்.