/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இ.சி.ஆரில் அவசர சிகிச்சைக்கு வழியின்றி பரிதவிப்பு செய்யூர் மருத்துவமனையை தரம் உயர்த்த பரிந்துரை
/
இ.சி.ஆரில் அவசர சிகிச்சைக்கு வழியின்றி பரிதவிப்பு செய்யூர் மருத்துவமனையை தரம் உயர்த்த பரிந்துரை
இ.சி.ஆரில் அவசர சிகிச்சைக்கு வழியின்றி பரிதவிப்பு செய்யூர் மருத்துவமனையை தரம் உயர்த்த பரிந்துரை
இ.சி.ஆரில் அவசர சிகிச்சைக்கு வழியின்றி பரிதவிப்பு செய்யூர் மருத்துவமனையை தரம் உயர்த்த பரிந்துரை
ADDED : நவ 25, 2024 02:05 AM

செங்கல்பட்டு:கிழக்கு கடற்கரை சாலை மற்றும் அதையொட்டிய 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளைச் சேர்ந்தோர், விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்கு செல்ல மருத்துவ வசதியின்றி தவித்து வருகின்றனர். அதனால், செய்யூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் ஆரம்ப சுகாதார நிலையம், நுாறு ஆண்டுகளுக்கு முன்பே இயங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு பின், அரசு மருத்துவமனை முழு நேரமாக தரம் உயர்த்தப்பட்டது.
இம்மருத்துவமனை, 2.5 ஏக்கர் பரப்பளவில், புறநோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவுடன், 50 படுக்கை வசதி கொண்டது.
இங்கு, ஐந்து டாக்டர் பணியிடங்களில், மூன்று டாக்டர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இரவு நேரங்களில், ஒரு டாக்டர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்.
இம்மருத்துவமனைக்கு, செய்யூர் மற்றும் அதை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 250க்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுவாக, அரசு மருத்துவமனைகளில் பொது மருத்துவம், குழந்தைகள் நலம், சிறப்பு மருத்துவம், கண், காது, மூக்கு தொண்டை, எலும்பு முறிவு, முடநீக்கம், ரத்த வங்கி, விபத்து அவசர சிகிச்சை, ஆய்வகம், எக்ஸ்ரே, ஸ்கேன் என, முக்கிய பிரிவுகள் இருக்க வேண்டும். ஆனால், பிரசவம், தாய் - சேய் நலம், காய்ச்சல், சர்க்கரை, பல் ஆகிய பிரிவுகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இங்கு, பொது மருத்துவத்திற்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எக்ஸ்ரே பிரிவில், ஒருவர் மட்டுமே பணிபுரிகிறார். இங்கு, எக்ஸ்ரேவும் சரியாக எடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தனியாரிடம் எக்ஸ்ரே எடுக்க வேண்டிய சூழல் உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில், கொளத்துார் முதல் கூவத்துார் வரை, சாலை விபத்துகளில் படுகாயமடைவோருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.
இதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் இருந்து, இதய நோய், காய்ச்சல், விஷ மருந்து குடித்துவிட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, செங்கல்பட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல, மருத்துவமனை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் பிணவறை இல்லாததால், மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சென்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனால், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என, நீண்டகாலமாக கிராமவாசிகள் அரசுக்கு மனு அளித்து வருகின்றனர்.
இதையடுத்து, மருத்துவமனையை மேம்படுத்த, 10 டாக்டர்கள், 15 செவிலியர்கள், மருந்தாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, 25 பேர் நியமிக்க வேண்டும் என, மருத்துவமனை நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தது.
அதன்பின், மருத்துவமனை வளாகத்தில், கட்டட வசதி, உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, 10.5 கோடி ரூபாய் கேட்டு, தமிழக அரசுக்கு கடந்தாண்டு மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்தது. ஆனால், இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், தேசிய சுகாதார குழுமம் சார்பில், 3.50 கோடி ரூபாயும், பிணவறை கட்டடம் கட்ட 60 லட்சம் ரூபாயும் என, 4.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளன.
செய்யூர் அரசு மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவில், ஒரு மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெறுகிறோம். முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சிறிய விபத்து என்றாலும், செங்கல்பட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். மருத்துவமனையை தரம் உயர்த்தி, அனைத்து சிகிச்சைகளும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- க.செல்வகுமார், சமூக ஆர்வலர், செய்யூர்.
செய்யூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்ய, 87 லட்சம் ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் கட்டடங்கள் கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.
- மருத்துவர்கள், அரசு மருத்துவமனை,செய்யூர்.