/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையை ஆக்கிரமித்து அமைத்த கம்பி வேலி அகற்றம்
/
சாலையை ஆக்கிரமித்து அமைத்த கம்பி வேலி அகற்றம்
ADDED : பிப் 14, 2025 01:25 AM

மதுராந்தகம்,:மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டது, பாக்கம் ஊராட்சி. இங்குள்ள மாரியம்மன் கோவில் தெரு பகுதியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராம சாலையை ஆக்கிரமித்து, தனிநபர் ஒருவர் தன் வீட்டின் முன், மதில் சுவர் எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க, கடந்த 2022-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் மதில் சுவர் இருந்ததால், அந்த தெருவில், கடந்த மூன்று ஆண்டுகளாக சாலை அமைக்க முடியாமல், பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து கிராமத்தினர், மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
இதன்படி வருவாய் துறையினர் ஆய்வு நடத்தி, சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை உறுதி செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மதில் சுவரை, மதுராந்தகம் போலீசார் பாதுகாப்புடன், வருவாய்த் துறையினர், 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக அகற்றினர்.
பின், நேற்று முன்தினம், அதே இடத்தில் மீண்டும், அந்த ஆக்கிரமிப்பாளர் கம்பி வேலி அமைத்துள்ளார்.
இது குறித்து, வருவாய்த் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர்.
இதையடுத்து, நேற்று சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை மற்றும் காவல் துறையினர், ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கம்பி வேலியை, 'பொக்லைன்' வாயிலாக அகற்றினர்.
மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால், வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், நீதிமன்றம் சென்று தீர்வு காணும்படியும், போலீசார் அறிவுறுத்திச் சென்றனர்.