/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விடுதி, உணவக பகுதி சாலைகளில் நீண்டகால ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
விடுதி, உணவக பகுதி சாலைகளில் நீண்டகால ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விடுதி, உணவக பகுதி சாலைகளில் நீண்டகால ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விடுதி, உணவக பகுதி சாலைகளில் நீண்டகால ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : செப் 26, 2024 12:42 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், வாகன போக்குவரத்து முக்கியத்துவம் உள்ள பிரதான சாலைகள், ஆக்கிரமிப்புகளால் குறுகின. பொதுமக்கள், சுற்றுலா பயணியர் செல்ல, ஆக்கிரமிப்புகள் இடையூறாக இருந்தன.
வாகன நெரிசலால், போக்குவரத்து முடங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டது. இங்கு, சப் - கலெக்டர் நாராயணசர்மா ஆய்வுசெய்து, சாலை ஆக்கிரமிப்புகளை, ஒரு வாரத்திற்கு தொடர்ச்சியாக அகற்றுமாறு, அரசுத் துறையினருக்கு உத்தரவிட்டார்.
வருவாய், பேரூராட்சி, நெடுஞ்சாலை, போக்குவரத்து காவல் ஆகிய துறையினர், கடந்த செப்., 18ம் தேதி முதல், முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அர்ஜுணன் தபசு சிற்பம், வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய பகுதி சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
நடைபாதை கடைகளை எல்லை வகுத்து, அதற்கும் மேல் கடையை நீட்டிக்கக் கூடாது என அறிவுறுத்தி, மஞ்சள் கயிறு கட்டினர். திருக்கழுக்குன்றம் சாலை வர்த்தக பகுதியிலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஒற்றைவாடைத் தெரு பகுதியில், நீண்டகாலமாக ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள், நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன. கிழக்கு ராஜ வீதி சந்திப்பு துவங்கி, மீனவர் பகுதி வரை, விடுதிகள், உணவகங்கள் நிறைந்துள்ளன.
இச்சாலையின் இருபுறமும் நீண்டகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டு, சாலை குறுகியது. வாகனம் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அறிவுறுத்தியும், ஆக்கிரமிப்பாளர்கள் அலட்சியப்படுத்தினர்.
நேற்று, ஜே.சி.பி., வாயிலாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நேற்று வரை ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனால், தென்மாட வீதி, பொதுப்பணித்துறை சாலை, பகிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை உள்ளிட்ட விடுபட்ட பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கை தொடருமா என, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.