/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அண்ணாநகரில் டாஸ்மாக் கடை மாற்ற கோரிக்கை
/
செங்கை அண்ணாநகரில் டாஸ்மாக் கடை மாற்ற கோரிக்கை
ADDED : மார் 15, 2025 09:30 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள, டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில், அண்ணாநகர் பகுதியில், இரண்டு ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு, அண்ணாநகர் மற்றும் சின்ன மேலமையூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் கடைக்கு சென்று, பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
இப்பகுதியைச்சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், அத்தியாவசிய பணி உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணாநகர் நுழைவாயில் பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இங்கு வரும் குடிமகன்கள் மதுபானம் வாங்கி, ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதி மற்றும் சாலையை குடிமையமாக மாற்றி, மதுபானம் குடிக்கின்றனர்.
குடிமகன்கள் தலைக்கு போதை ஏறியதும் சாலையில் செல்லும் இளம்பெண்கள், பெண்களை கிண்டல் செய்து, வம்புக்கு இழுத்து, சண்டைபோடுகின்றனர். இதனால், சாலையில் நடந்து செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுமட்டும் இன்றி, குடிமகன்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, நகரவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 11ம் தேதி, செங்கல்பட்டு அரசு நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினிடம், டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்ய வேண்டும் என, நகரவாசிகள் மனு அளித்தனர்.