/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொலம்பாக்கம் சாலை பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
/
பொலம்பாக்கம் சாலை பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
ADDED : டிச 11, 2024 12:22 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையையும், செய்யூர் - சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலையையும் இணைக்கும் 3 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.
இந்த சாலையை பொலம்பாக்கம், ஆனந்தபுரம், குரும்பிறை மற்றும் மழுவங்கரணை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சாலையில் தினசரி, ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இச்சாலை கடுமையாக சேதமடைந்து, கடந்த 15 ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1.20 கோடி மதிப்பீட்டில், 3.2 கி.மீ., துார சாலையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 5 மாதங்களாக சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் தற்போது, ஜல்லிகள் நிரவப்பட்டு கடந்த ஒரு மாதமாக சாலை அமைக்கப்படாமல் உள்ளதால், இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இதனால், துறை சார்ந்த அதிகாரிகள் சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சித்தாமூர் வட்டார இணை பொறியாளர் சங்கர் கூறியதாவது:
பருவமழை காரணமாக அடிக்கடி மழை பெய்து வருவதால், மழை நேரத்தில் தார்ச்சாலை அமைத்தால் விரைவில் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
அதனால், மழை இல்லாத நேரத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது.
அடுத்த சில நாட்களில் சாலை பணி முழுமையடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

