/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை ஓட்டேரி மேம்பாலத்துடன் இணைக்க கோரிக்கை
/
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை ஓட்டேரி மேம்பாலத்துடன் இணைக்க கோரிக்கை
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை ஓட்டேரி மேம்பாலத்துடன் இணைக்க கோரிக்கை
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை ஓட்டேரி மேம்பாலத்துடன் இணைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 18, 2025 07:55 PM
கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே அமைக்கப்பட்டுவரும் புதிய ரயில் நிலையத்துடன், ஓட்டேரி மேம்பாலத்தை இணைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலுார் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே, கிளாம்பாக்கத்தில், புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகளை, ரயில்வே நிர்வாகம், கடந்த 2024, மார்ச் மாதம் துவக்கியது.
பின், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும், பேருந்து முனையத்தையும் நேரடியாக இணைக்கும் வகையில், 280 மீ., நீளத்தில், கூரையுடன் கூடிய உயர்மட்ட நடைபாதை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
தொடர்ந்து, உயர்மட்ட நடைபாதை அமைக்க 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகளை சி.எம்.டி.ஏ., நிர்வாகம், கடந்த 2024, நவம்பரில் துவக்கியது.
இந்நிலையில், ஓட்டேரி மேம்பாலத்துடன் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைத்தால், போக்குவரத்திற்கும், பயணியர் பயன்படுத்துவதற்கும், கூடுதலான வசதிகள் கிடைக்கும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வண்டலூர் ஊராட்சியின் பெரும்பான்மை மக்கள் ஓட்டேரி பகுதியில் வசிக்கின்றனர். ஓட்டேரியிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்ல, ஜி.எஸ்.டி., சாலை ஓரம், 300 மீ., நீளம், 20 மீ., அகலம் உள்ள மேம்பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
இந்த மேம்பாலம் வழியாக ஓட்டேரி, மண்ணிவாக்கம் பகுதிவாசிகள் குறுகிய நேரத்தில் ஜி.எஸ்.டி., சாலைக்கும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கும் பயணிக்கின்றனர்.
இந்த மேம்பாலத்திற்கும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் 100 மீ., இடைவெளிதான் உள்ளது. தவிர, மேம்பாலத்திலிருந்து 300 மீ., தொலைவில்தான் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உள்ளது.
எனவே, ஓட்டேரி மேம்பாலத்துடன் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைத்தால், பல்லாயிரம்பேர், எளிதாக கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு செல்ல முடியும்.
இதனால், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து, பேருந்து முனையம் செல்ல கூடுதலாக ஒரு வழித்தடம் கிடைக்கும்
மேலும், ரயில் நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி., சாலை செல்லவும், ஓட்டேரி, மண்ணிவாக்கம் மற்றும் வாலாஜாபாத் சாலை செல்லவும் கூடுதல் வழித்தடம் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.