/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வலுவிழந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற கோரிக்கை
/
வலுவிழந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற கோரிக்கை
வலுவிழந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற கோரிக்கை
வலுவிழந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற கோரிக்கை
ADDED : ஆக 11, 2025 11:18 PM

அச்சிறுபாக்கம்,
உத்தமநல்லுார் கிராமத்தில், வலுவிழந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், திருமுக்காடு ஊராட்சிக்கு உட்பட்டது, உத்தமநல்லுார் கிராமம். இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு, 25 ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தேவைக்காக கிணறு அமைக்கப்பட்டு, 30,000 லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அதிலிருந்து, கிராமத்தினருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்களின் அடிப்பகுதியில், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த நிலையிலுள்ள இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன.
தண்ணீர் தொட்டியின் பக்கவாட்டிலும் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, வலுவிழந்து உள்ளது.
அதனால், இந்த பழைய நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி, புதிய நீர்தேக்க தொட்டி கட்ட வேண்டுமென, ஊராட்சி நிர்வாகம் சார்பில், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி, அதே இடத்தில் புதிதாக நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.