/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேலக்கண்டையூரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்க வேண்டுகோள்
/
மேலக்கண்டையூரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்க வேண்டுகோள்
மேலக்கண்டையூரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்க வேண்டுகோள்
மேலக்கண்டையூரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்க வேண்டுகோள்
ADDED : செப் 15, 2025 11:59 PM

பவுஞ்சூர்;மேலக்கண்டை ஊராட்சியில், 5,000 நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால், மழையில் இருந்து நெல்லை பாதுகாக்க, விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே, நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் ஒன்றியம், ஜமீன் எண்டத்துார் குறுவட்டத்திற்கு உட்பட்ட மேலக்கண்டை, கீழக்கண்டை, முருகம்பாக்கம், அத்திவாக்கம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், 7,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.
அதிகப்படியாக ஏரி, கிணறு நீர்ப்பாசனம் மூலமாக, நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல், தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சொர்ணவாரி பருவத்தில் மேலக்கண்டை ஊராட்சியில், ஆக., 3வது அல்லது 4வது வாரங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்படும். பின், விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படும்.
இந்தாண்டு, 46 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் மேலக்கண்டை ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் துவக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி மூன்றாம் கட்டமாக, மேலக்கண்டை உட்பட 19 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
ஆனால், தற்போது வரை நெல் கொள்முதல் நிலையம் செயல்படாமல் உள்ளதால், 5,000க்கும் மேற்பட்ட மூட்டை நெல் தேங்கி உள்ளது.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க இடவசதி இல்லாமல், விவசாயிகள் அவதிப்படுகின்றனர். மேலக்கண்டை போன்ற இடங்களில், வழக்கமாக கொள்முதல் நிலையம் துவக்கப்படும் இடங்களில், நெல்லை உலர்த்தி பாதுகாத்து வருகின்றனர்.
எனவே, மேலக்கண்டையில் நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.