/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜப்பான் சிட்டி தொழில் பூங்காவிற்கு பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
ஜப்பான் சிட்டி தொழில் பூங்காவிற்கு பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை
ஜப்பான் சிட்டி தொழில் பூங்காவிற்கு பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை
ஜப்பான் சிட்டி தொழில் பூங்காவிற்கு பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஜன 29, 2025 12:40 AM
திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியத்தில், 50 ஊராட்சிகள் உள்ளன. இதில், பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை சார்ந்த 20 ஊராட்சிகள் தொழிற்சாலைகள், கல்லுாரிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளால், சுய வருமானம் கொண்டவையாக உள்ளன.
மீதமுள்ள ஊராட்சிகளில் மானாமதி, ஆமூர், பெரியவிப்பேடு, பெரிய இரும்பேடு, அருங்குன்றம், மடையத்துார், பனங்காட்டுப்பாக்கம், சோனலுார், வெளிச்சை, காரணை உள்ளிட்ட ஊராட்சிகள், அரசு அளிக்கும் வருவாயை வைத்து இயங்கும் நிலையில் உள்ளன.
650 ஏக்கர்
கடந்த 50 ஆண்டுகள் வரை, திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய குன்னப்பட்டு ஊராட்சியும், இந்த வகையில் தான் இருந்து வந்தது.
கடந்த 2011ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, திருப்போரூர் அருகே, 'ஜப்பான் தொழில் நகரம்' உருவாக்கப்படுவதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, குன்னப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட, 650 ஏக்கர் பரப்பில் தொழிற்சாலைகள் அமைவதற்கான சாலை வசதிகள், வடிகால்வாய்கள், சிறு பாலங்கள், மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
தற்போது ஹிட்டாச்சி, அஜினமோட்டோ உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இத்தொழில் பூங்காவில் செயல்படுகின்றன. இதில், 5,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த ஊராட்சி அருகே பஞ்சந்திருத்தி, மானாம்பதி, சந்தினாம்பட்டு, ஆமூர், காரணை, பண்டிதமேடு, பையனுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த தொழிற்சாலைக்குச் செல்லும் பிரதான வழி, ஓ.எம்.ஆர்., சாலை பையனுாரிலிருந்து, 2 கி.மீ., துாரத்திற்கு பிரிந்து செல்கிறது. தவிர, கிராம பகுதிகள் வழியாக மற்ற சாலைகளும் இணைகின்றன.
நடவடிக்கை வேண்டும்
இந்நிலையில், இங்கு அரசு பேருந்து வசதி இல்லை. தொழிலாளர்கள் நிறுவனம் சார்ந்த வாகனங்களிலும், சொந்த வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.
இத்தொழில் பூங்கா வளாகத்திற்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து பேருந்து வசதிகளை ஏற்படுத்தினால், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களும் பயன்படுத்திக் கொள்வர்.
எனவே, குன்னப்பட்டு ஜப்பான் சிட்டி தொழில் பூங்காவிற்கு பேருந்து வசதி ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

