/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேளாண் விரிவாக்க மையத்திற்கு வழிகாட்டி பலகை வைக்க கோரிக்கை
/
வேளாண் விரிவாக்க மையத்திற்கு வழிகாட்டி பலகை வைக்க கோரிக்கை
வேளாண் விரிவாக்க மையத்திற்கு வழிகாட்டி பலகை வைக்க கோரிக்கை
வேளாண் விரிவாக்க மையத்திற்கு வழிகாட்டி பலகை வைக்க கோரிக்கை
ADDED : டிச 06, 2024 09:57 PM
திருப்போரூர்:திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், திருப்போரூர் வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இடம் பற்றாக்குறை, பழுதடைந்த கட்டடம் போன்ற பல்வேறு காரணங்களால், புதிய கட்டடம் கட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
அதன்படி, திருப்போரூரிலிருந்து, 6 கி.மீ.,யில் உள்ள செம்பாக்கம் ஊராட்சி, சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, புதிதாக இரு தளங்களுடன், திருப்போரூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் கட்டப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது.
இந்த வட்டார வேளாண் துறைக்கு உட்பட்டு சிறுங்குன்றம், மருதேரி, செம்பாக்கம், மடையத்துார், தண்டலம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
மேற்கண்ட பல்வேறு கிராமங்களில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்தோர் விவசாயம் செய்கின்றனர்.
இப்பகுதிகளில், 1,000 ஏக்கர் பரப்பிற்கு மேல் நெல் பயிரிடப்படுகிறது. தோட்டக்கலை பயிர்களான காய்கறி, பூ வகைகளும் குறிப்பிட்ட பருவத்தில் பயிரிடப்படுகின்றன.
விவசாயிகள் வேளாண் அலுவலகம், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை சார்ந்து ஆலோசனை மற்றும் இடு பொருட்கள் வாங்க, அலுவலகத்திற்கு செல்கின்றனர்.
இந்நிலையில், திருப்போரூரிலிருந்து செம்பாக்கம் பகுதிக்கு அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்பட்டதால், செம்பாக்கம் செல்லும் சூழல் உருவானது. உள்ளூர் விவசாயிகள் இடம் தெரிந்து செல்கின்றனர்.
ஆனால், வெளியூரிலிருந்து நிலம் வாங்கி விவசாயம் செய்வோர், புதிய அலுவலகம் இருக்கும் இடம் தெரியாமல் குழம்புகின்றனர்.
எனவே, திருப்போரூர் - செங்கல்பட்டு பிரதான சாலையில், வேளாண் அலுவலகம் செல்லும் வழியை காட்டும் வகையில், வழிகாட்டி பெயர் பலகை வைக்க வேண்டும் என, விவசாயிகள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.