/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரப்பாக்கம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை
/
ஊரப்பாக்கம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை
ஊரப்பாக்கம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை
ஊரப்பாக்கம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை
ADDED : செப் 02, 2025 12:51 AM
ஊரப்பாக்கம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள ஊரப்பாக்கம் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் உள்ளன. இதில், வண்டலுார் அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சி, 692 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது.
இங்குள்ள 15 வார்டுகளில், 80,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
நகராட்சிக்கு இணையாக பரப்பிலும், மக்கள் தொகையிலும் பெரிய ஊராட்சியாக, ஊரப்பாக்கம் உள்ளது. ஆனால், அடிப்படை வசதிகளில், ஊரப்பாக்கம் ஊராட்சி மிகவும் பின்தங்கி உள்ளது.
எனவே, ஊரப்பாக்கத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஊரப்பாக்கம் மக்கள் கூறியதாவது:
தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய நகரங்களை இணைக்கும் ஜி.எஸ்.டி., தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே அமைந்துள்ளதால், ஊரப்பாக்கத்தில் புதிதாக வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால், ஊராட்சி வளர்ச்சிக்காக மாவட்ட, ஒன்றிய நிர்வாகம் சார்பில், உரிய அளவில் நிதி ஒதுக்கப்படுவது இல்லை.
ஆரம்ப சுகாதார மையம், கழிவுநீர் கால்வாய், உட்புற சாலைகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாததால், சிரமமாக உள்ளது.
எனவே, வரி வருவாய் மற்றும் அரசு ஒதுக்கும் வளர்ச்சி நிதிகளை பெறும் வகையில், ஊரப்பாக்கத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.