/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலைநகரில் பெண்கள் மேல்நிலை பள்ளி அறிவிப்புக்காக பகுதிவாசிகள் காத்திருப்பு
/
மறைமலைநகரில் பெண்கள் மேல்நிலை பள்ளி அறிவிப்புக்காக பகுதிவாசிகள் காத்திருப்பு
மறைமலைநகரில் பெண்கள் மேல்நிலை பள்ளி அறிவிப்புக்காக பகுதிவாசிகள் காத்திருப்பு
மறைமலைநகரில் பெண்கள் மேல்நிலை பள்ளி அறிவிப்புக்காக பகுதிவாசிகள் காத்திருப்பு
ADDED : மார் 18, 2025 09:01 PM
மறைமலைநகர்:மறைமலைநகர் என்.ஹெச் 2 கம்பர் தெருவில், அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், 700க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் பயில்கின்றனர்.
இந்த பள்ளியில் கூடலுார், காட்டூர், கலிவந்தபட்டு, மறைமலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏழ்மையான குடும்ப சூழ்நிலை உள்ள மாணவ -- மாணவியர் பயில்கின்றனர்.
இந்த இருபாலர் படிக்கும் பள்ளியைப் பிரித்து, தனியாக பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என, பெற்றோர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கான அறிவிப்பு, இந்தாண்டு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மறைமலைநகர் பகுதியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வேலை தேடி வந்து, குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
பொருளாதார வசதி குறைந்த பலர், தங்களின் குழந்தைகளை படிக்க வைக்க, இங்கு உள்ள அரசு பள்ளிகளையே நம்பி உள்ளனர்.
பெண் குழந்தைகளுக்கென தனியாக, இந்த பகுதியில் பள்ளிகள் இல்லாததால், 10 கி.மீ., துாரத்தில் உள்ள நந்திவரம்- - கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் சூழல் உள்ளது.
அங்குள்ள பள்ளிக்கு பேருந்து பிடித்து சென்று வருவதில், குழந்தைகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே, மறைமலைநகர் அரசு பள்ளியை இரண்டாக பிரித்து, பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.
கல்வித்துறை அதிகாரிகளால் கோரிக்கை ஏற்கப்பட்டு, அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மறைமலைநகர் குடியிருப்போர் நலச் சங்கம், கடந்த 2018ம் கல்வியாண்டு 2 லட்சம் ரூபாய் செலுத்தியும், இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டசபையில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, மறைமலைநகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் அவசியம் குறித்து பேசினார்.
கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளிடம் கருத்துரு பெற்று, கோரிக்கை நிறைவேற்றப்படும் எனக் கூறி இருந்தார்.
எனவே, இந்தாண்டு பட்ஜெட் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிட்டு, மறைமலைநகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.