/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கவுன்சிலருக்கு கட்டுப்பாடு: பஞ்சாயத்தார் அடாவடி
/
கவுன்சிலருக்கு கட்டுப்பாடு: பஞ்சாயத்தார் அடாவடி
ADDED : செப் 18, 2025 11:14 PM
செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பனையூர் பெரியகுப்பம் மற்றும் சின்னகுப்பம் மீனவர்களிடையே, கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
சாலை அமைப்பது குறித்து பனையூர் சின்னகுப்பம் மற்றும் தழுதாளிகுப்பம் மக்களிடையே தகராறு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் அமைதி பேச்சு நடந்தது.
இதில், சாலை அமைப்பது குறித்து விளக்கம் அளிக்க, 6வது வார்டு கவுன்சிலர் என்ற முறையில், வீரராகவன் பங்கேற்றார்.
இந்நிலையில், பனையூர் சின்னகுப்பம் சார்பாக அமைதி பேச்சில் பங்கேற்றதால், வீரராகவனுக்கு பனையூர் பெரியகுப்பம் பஞ்சாயத்தார் கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, இடைக்கழிநாடு பேருராட்சி 6வது வார்டு கவுன்சிலர் வீரராகவன் நேற்று, செய்யூர் வட்டாட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அமைதி பேச்சு கூட்டத்தில் பங்கேற்றதால், பொது இடத்தில் நடக்கக் கூடாது, யாரிடமும் பேசக்கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஊரில் இருக்க வேண்டுமென்றால், ஊர் மத்தியில் பஞ்சாயத்தார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என, பனையூர் பெரியகுப்பம் பஞ்சாயத்தார் தண்டோரா போட்டு, கிராமத்தில் தெரிவித்து உள்ளனர்.
வட்டாட்சியர் விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.