/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்
/
சாலையில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்
ADDED : ஜன 06, 2025 02:30 AM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் பகுதியில் கூவத்துார்- மதுராந்தகம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
சாலையில் இருசக்கரவாகனம்,கார்,பேருந்து என தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
அதிக வாகன போக்குவரத்து உள்ள இந்த சாலையில் கால்நடைகள் கட்டுப்பாடு இன்றி உலா வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இரவு நேரத்தில் உலா வரும் கால்நடைகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
பொதுமக்களிடம் ஒலிப்பெருக்கி மூலமாக காவல் துறையினர் அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது வரை கட்டுபாடு இன்றி கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து, கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
* இதே போல் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் செங்கல்பட்டு சுற்று பகுதிகளான பரனுார், புலிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள், மாடுகள் உள்ளிட்டவை சுதந்திரமாக சுற்றி வருவதால் இவை சாலையின் குறுக்கே செல்லும் போது அடிக்கடி விபத்துகள் சிக்கி வருகின்றனர்.
இந்நிலையில் பரனுார், புலிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக குதிரைகள் நெடுஞ்சாலையில் சுற்றி வருகின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
மாடுகள் வளர்ப்போர் முறையாக கட்டி வளர்க்காமல் நெடுஞ்சாலையில் மேய்ச்சலுங்காக விடுகின்றனர். இதனால் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கை, கால்கள் முறிவு ஏற்பட்டு வருகின்றன. தற்போது குதிரைகள் நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் சுற்றி வருகின்றன. குதிரைகள் சாலையில் சுற்றி வருவதால் வாகனங்களின் சத்தத்தை கேட்டு சாலை குறுக்கே ஓடுகின்றன. எனவே குதிரைகள் வளர்ப்போர் முறையாக வளர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.