/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை விரிவாக்க பணிகள் அச்சிறுபாக்கத்தில் துவக்கம்
/
சாலை விரிவாக்க பணிகள் அச்சிறுபாக்கத்தில் துவக்கம்
ADDED : பிப் 14, 2025 01:08 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, அச்சிறுபாக்கம் டவுன் பகுதிக்கு, மாநில நெடுஞ்சாலையின் புறவழிச் சாலை செல்கிறது.
இந்த சாலை பகுதியில் வணிக வளாகம், துணிக்கடைகள், சிறிய உணவகங்கள், காய்கறி கடைகள் உள்ளன.
அதனால் விசேஷ நாட்கள், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பொருட்கள் வாங்க வரும் மக்கள், தங்களின் இரு சக்கர வாகனங்களை, சாலை பகுதியிலேயே நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
அதனால், வாகன நெரிசல் மிகுந்து காணப்படும்.
அதனால், சாலையை விரிவாக்கம் செய்ய, அப்பகுதி மக்கள் மாநில நெடுஞ்சாலைத் துறையினருக்கு, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1.50 கோடி ரூபாய் மதிப்பில், 700 மீட்டர் நீளம்,- 15 அடி அகலத்தில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி, நேற்று துவக்கப்பட்டது.
சாலை விரிவாக்கம் செய்யும் பணி, தனியார் பள்ளி பகுதியில் இருந்து, அம்மன் கோவில் வரை, 450 மீட்டர், பேரூராட்சி அலுவலகம் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில், 250 மீட்டர் நீளம் என, 700 மீட்டர் சாலை விரிவாக்கம் பணி நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அச்சிறுபாக்கம் மதுவிலக்கு காவல் நிலையத்திலிருந்து, அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலகம் வரையிலான பகுதிகள், போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி.
இங்கு, சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதியின்றி வணிக வளாகங்கள் செயல்பட்டு வருவதால், சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
கூட்ட நெரிசல் உள்ள பகுதியில், சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அப்பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள்