/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சோழிபொய்கை குளத்தை துார்த்து சாலை செங்கை கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
/
சோழிபொய்கை குளத்தை துார்த்து சாலை செங்கை கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
சோழிபொய்கை குளத்தை துார்த்து சாலை செங்கை கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
சோழிபொய்கை குளத்தை துார்த்து சாலை செங்கை கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
ADDED : ஆக 31, 2025 02:02 AM
சென்னை:மாமல்லபுரம் சோழிபொய்கை குளத்தை துார்த்து சாலை அமைக்கப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, செங்கல்பட்டு கலெக்டருக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
மல்லை நீர்நிலைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
கடந்த 2018ல், மாமல்லபுரம் பேரூராட்சியில் உள்ள சோழிபொய்கை குளம், 50 லட்சம் ரூபாய் செலவில் துார் வாரப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால், இப்போது கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த சோழிபொய்கை குளத்தில் மண் கொட்டி துார்த்து, நெடுஞ்சாலைத் துறை சாலை அமைத்து வருகிறது.
நெடுஞ்சாலைகள் அமைக்கும் போது ஏரி, குளங்களுக்கு பாதிப்பில்லாமல் அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, சோழிபொய்கை குளத்தை மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் அப்ரோஸ் அகமது ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ளும் சாலை விரிவாக்க பணிகளுக்காக, மாமல்லபுரம் சோழிபொய்கை குளமும், அங்கு இருந்த இயற்கை நீரூற்றும் மூடப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கத்திற்காக பாலம் அமைக்க, நீர்நிலையின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சோழிபொய்கை குளத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என, மல்லை நீர்நிலைகள் பாதுகாப்பு சங்கம் கோரியுள்ளது. இந்த அம்சங்களை ஆராய்ந்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நீர்வளத்துறை, மாமல்லபுரம் பேரூராட்சி ஆகிய அரசு அமைப்புகளும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, செப்டம்பர் 19ம் தேதி நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.