/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நல்லம்பாக்கம் - கீரப்பாக்கம் வனப்பகுதியில் சாலை பணி துவக்கம்
/
நல்லம்பாக்கம் - கீரப்பாக்கம் வனப்பகுதியில் சாலை பணி துவக்கம்
நல்லம்பாக்கம் - கீரப்பாக்கம் வனப்பகுதியில் சாலை பணி துவக்கம்
நல்லம்பாக்கம் - கீரப்பாக்கம் வனப்பகுதியில் சாலை பணி துவக்கம்
ADDED : ஏப் 04, 2025 01:34 AM

செங்கல்பட்டு:நல்லம்பாக்கம் -- கீரப்பாக்கம் வரை வனப்பகுதியில், சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது.
சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிரிந்து ஊரப்பாக்கம், காட்டூர், காரணைபுதுச்சேரி, அருங்கால், கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் வரை, 12.4 கி.மீ., சாலை, மாவட்ட சாலை, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இச்சாலையில் நல்லம்பாக்கம் -- கீரப்பாக்கம் வரை, 2.4 கி.மீ., துாரம் சாலை, வனத்துறை வழியாக செல்கிறது.
நல்லம்பாக்கம் பகுதியில், மத்திய தார் சுடுகலவை இயந்திரங்கள், ஜல்லி அரைவை இயந்திரங்கள் என, தலா 100க்கும் மேற்பட்டவை உள்ளன.
'ரெடி மிக்ஸ் கான்கிரீட்' கலவை இயந்திரங்கள் 30க்கும் அதிகமாக உள்ளன. இங்கிருந்து, 1,000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியினர் கூடுவாஞ்சேரி, வண்டலுார், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி, கல்லுாரி, அத்தியாவசிய பணி, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு, அரசு மருத்துவமனை உள்ளிட்ட தேவைக்காக, சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்து, தினமும், 1,000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.
இதனால், தார்ச்சாலை சீரழிந்து, போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறியது.
இத்தடத்தில் இயங்கிய, மாநகர பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, சாலை சீரழிந்து உள்ளது.
இதைத்தொடர்ந்து, சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்க கோரி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை பரிந்துரை செய்தன.
இதையேற்று, சாலை அமைக்க, வனத்துறை அனுமதி அளித்து, நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டது.
அதன் பின், நல்லம்பாக்கம் -- கீரப்பாக்கம் வனப்பகுதியில், 2.4 கி.மீ., சாலை அமைக்க, 5 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கீடு செய்தது. இப்பணிக்கு, கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 11ம் தேதி, டெண்டர் விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சாலை அமைக்கும் பணியை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன், கலெக்டர் அருண்ராஜ், ஆகியோர் கடந்தாண்டு ஜூலை மாதம் 23ம் தேதி துவக்கி வைத்தனர். அதன் பின், நல்லம்பாக்கம் -- கீரப்பாக்கம் சாலையில், வனத்துறை பகுதியில், 2.4 கி.மீ., துாரம், அகலம் 21 அடியில், 16 அடி தார்ச்சலையும், 5 அடி கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.
தற்போது, ஒரு கி.மீ.,க்கு மேல் பணிகள் முடிந்துள்ளது. 1.4 கி.மீ., பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கிராமவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

