/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையை சீரமைக்க வைத்த தடுப்புகள் பணி முடிந்தும் அகற்றாததால் அவதி
/
சாலையை சீரமைக்க வைத்த தடுப்புகள் பணி முடிந்தும் அகற்றாததால் அவதி
சாலையை சீரமைக்க வைத்த தடுப்புகள் பணி முடிந்தும் அகற்றாததால் அவதி
சாலையை சீரமைக்க வைத்த தடுப்புகள் பணி முடிந்தும் அகற்றாததால் அவதி
ADDED : டிச 05, 2024 11:01 PM

கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அடுத்துள்ள கூடுவாஞ்சேரி சிக்னலில் இருந்து கூடுவாஞ்சேரி ரயில் நிலையம், ஆதனுார், மாடம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, வலதுபுறமாக திரும்பி வாகனங்கள் சென்று வந்தன.
அதேபோன்று, சிக்னலில் இருந்து இடதுபுறமாக பெருமாட்டுநல்லுார், காயரம்பேடு, பாண்டூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வந்தன. சில மாதங்களுக்கு முன், ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும் எட்டு வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வந்தது.
சாலை பராமரிப்பு பணிக்காக, கூடுவாஞ்சேரி சிக்னலில் இருந்து வலதுபுறமாக திரும்புவதற்கு தடை ஏற்படுத்தி, 'பேரிகார்டு' எனும் இரும்பு தடுப்புகளை வைத்து, போக்குவரத்து போலீசார் அடைத்தனர்.
தற்போது, சாலை பணிகள் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும், அந்த இரும்பு தகடுகளை அகற்றி, சிக்னலை இயக்கி போக்குவரத்தை தொடங்குவதில், போக்குவரத்து துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள் கூடுவாஞ்சேரி சிக்னலில் இருந்து வலதுபுறமாக தாம்பரம், கேளம்பாக்கம் நோக்கி சென்று வந்தன.
தற்போது அந்த இடத்தில் இரும்பு தடுப்பு வைத்து அடைக்கப்பட்டு உள்ளதால், ஜி.எஸ்.டி., சாலையில் நேராக சென்று, சீனிவாசபுரம் சிக்னலில் இருந்து வலதுபுறமாக திரும்பி, தாம்பரம் நோக்கிச் செல்கின்றன. இதனால், 2 கி.மீ., துாரம் வாகன ஓட்டிகள் தேவையின்றி சுற்றுகின்றனர்.
மாநகர பேருந்துகளுக்கும்தேவையற்ற எரிபொருள் செலவு ஏற்படுகிறது. எனவே, கூடுவாஞ்சேரி சிக்னலில் உள்ள இரும்பு தடுப்புகளை அகற்றி, மீண்டும் பழையபடி போக்குவரத்தை துவங்கும் பட்சத்தில், மாநகர பேருந்துகள் மற்றும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, கூடுவாஞ்சேரி சிக்னலில் உள்ள இரும்பு தடுப்புகளை அகற்றி, போக்குவரத்தை துவக்கி வைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சிக்னல் அருகில் நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் அதிகமாக உள்ளன.
பள்ளி செல்லும் மாணவர்கள் இந்த சாலையை கடந்து செல்வதில், இரும்பு தடுப்புகளால் கடும் சிரமம் அடைகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.