/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் அபாய பள்ளம் பவுஞ்சூர் அருகே அச்சம்
/
சாலையோரம் அபாய பள்ளம் பவுஞ்சூர் அருகே அச்சம்
ADDED : ஏப் 11, 2025 01:50 AM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே, கல்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம், மழையால் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மண் கொட்டி சமன்படுத்த வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
பவுஞ்சூர் அடுத்த வடக்குவாயலுார் கிராமத்தில் இருந்து, கல்குளம் கிராமத்திற்குச் செல்லும் தார்ச்சாலை உள்ளது.
இந்த சாலையில் தினமும், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
பருவ மழையின் போது, இங்குள்ள ஏரி நிரம்பி, உபரிநீர் வெளியேறியது. அப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இந்த தார்ச்சாலையோரம் இருந்த மண் அடித்துச் செல்லப்பட்டு, அபாய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரத்தில் இந்த சாலையின் வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்டவை, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், பெரிய வாகனங்கள் எதிரெதிரே வரும் போது, வழிவிட ஒதுங்கினால், பள்ளத்தில் கவிழும் சூழல் நிலவுகிறது.
எனவே, ஊராட்சி நிர்வாகம் இதை கவனித்து, சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மண் கொட்டி சமன்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.