/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
353 ஆன்லைன் மோசடிகளில் பறிபோன தொகை ரூ.34.53 கோடி 4 ஆண்டுகளில் ரூ.1.21 கோடி மீட்டு ஒப்படைப்பு
/
353 ஆன்லைன் மோசடிகளில் பறிபோன தொகை ரூ.34.53 கோடி 4 ஆண்டுகளில் ரூ.1.21 கோடி மீட்டு ஒப்படைப்பு
353 ஆன்லைன் மோசடிகளில் பறிபோன தொகை ரூ.34.53 கோடி 4 ஆண்டுகளில் ரூ.1.21 கோடி மீட்டு ஒப்படைப்பு
353 ஆன்லைன் மோசடிகளில் பறிபோன தொகை ரூ.34.53 கோடி 4 ஆண்டுகளில் ரூ.1.21 கோடி மீட்டு ஒப்படைப்பு
ADDED : ஜன 27, 2025 11:13 PM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், 'ஆன்லைன்' மோசடியில் பணத்தை இழந்ததாக, சைபர் கிரைம் போலீசில் 353 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளில், 34.53 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 1.21 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், சைபர் கிரைம் குற்றப் பிரிவு இயங்கி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானோர், 'டிஜிட்டல்' பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர்.
மளிகைக் கடை முதல் பெரிய அளவிலான கடைகள் வரை இணைய வழியிலேயே பண பரிவர்த்தனை செய்ய முடிவதால், மக்களுக்கு அலைச்சல், கால விரயம் தவிர்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதால், பெரும்பாலானோர் தங்கள் மடிக்கணினி, மொபைல்போன் வாயிலாகவே பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களை தொடர்பு கொள்ளும் 'சைபர் கிரைம்' குற்றவாளிகள், ஓ.டி.பி., எனப்படும் கடவுச்சொல்லை, பொதுமக்களிடம் கேட்டுப் பெறுகின்றனர்.
'வீடியோ கால்'
அதன் வாயிலாக, அவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் கையாடல் செய்கின்றனர். மேலும், 'வீடியோ கால்' வாயிலாக மற்றவர்களை தொடர்பு கொண்டு, ஆபாசமான முறையில் ஆசைகளைத் துாண்டி, பேசியதை பதிவு செய்து மிரட்டுவது போன்ற குற்றச் செயல்களில், வடமாநில இளைஞர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர்.
வேலை வாய்ப்பு மற்றும் தொழில் ரீதியாகவும், இத்தகைய மோசடி நடக்கிறது. கடந்த சில மாதங்களாக, 'கூரியர்' நிறுவனம் வாயிலாக போதைப்பொருள் வந்திருப்பதாக, வீடியோ கால் வாயிலாக காவல் நிலையம் மற்றும் டி.எஸ்.பி., எஸ்.பி., அலுவலகம் அமைத்து, போலீஸ் அதிகாரிகளைப் போல் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டி வங்கி கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை பெற்று, மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர்கள், விடுமுறை நாட்களில் வீடுகளில் இருக்கும் போது, மொபைல்போனில் அழைக்கும் சைபர் குற்றவாளிகள், ஷேர் மார்க்கெட்டில் அதிக பணம் கிடைப்பதாக கூறுகின்றனர்.
இதை நம்பும் அவர்கள், சைபர் குற்றவாளிகள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்துகின்றனர். பணம் மோசடி செய்யப்பட்டது தெரிந்து, அவர்களை தொடர்பு கொள்ளும்போது துண்டித்து விடுகின்றனர்.
மாவட்டத்தில் செங்கல்பட்டு, மகேந்திரா வேர்ல்டு சிட்டி, கல்பாக்கம் அணுபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில், நான்கு ஆண்டுகளில், சைபர் கிரைம் போலீசார் 353 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில், ஆன்லைன் வாயிலாக அதிக லாபம் கிடைப்பதாகவும், தொழில் துவங்க கடன் உதவி, வேலை வாங்கித் தருவதாகவும் பெண்கள், இளைஞர்களிடம் ஆசையைத் துாண்டி, வடமாநில வாலிபர்கள், இளம்பெண்கள் ஆகியோர் தங்களின் வங்கி கணக்கில் லாவகமாக பணத்தை பெற்றுள்ளனர்.
அதன் பின், அவர்களின் மொபைல் எண்களை தொடர்பு கொள்ளும் போது, மொபைல் எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது தெரிகிறது.
இதேபோல், போலியான இணையதளங்களை துவக்கி, அவற்றின் வாயிலாகவும் பல லட்சம் ரூபாய் பெற்ற மோசடி பேர்வழிகள், திடீரென இணையதளத்தை முடக்கிவிட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது. இதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 353 வழக்குகளில், 34.53 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விழிப்புணர்வு
பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை பிடித்து, அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் நான்கு ஆண்டுகளில், 1.21 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சைபர் கிரைம் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில், தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, சைபர் கிரைம் போலீசார் நடத்தி வருகின்றனர்.