/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.7,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
/
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.7,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.7,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.7,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
ADDED : செப் 28, 2024 12:56 AM

செய்யூர்,:லத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி, 50. தனக்கு சொந்தமான நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்ய, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்தார்.
அந்த விண்ணப்பம், தண்டரை கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நீண்ட நாட்களாக விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தப்பட்டிருந்ததால், புகழேந்தி இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுதாகர், 40, என்பவரைடம் விசாரித்தார்.
அப்போது, பட்டா பெயர் மாற்றம் செய்ய, 7,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத புகழேந்தி, இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
நேற்று காலை 11:30 மணிக்கு, ரசாயனம் தடவிய, 7,000 ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் புகழேந்தியிடம் கொடுத்து அனுப்பினர்.
லஞ்சப் பணத்தை கொடுப்பதற்காக, மொபைல் போன் வாயிலாக சுதாகரை தொடர்புகொண்டபோது, லத்துார் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்துவிட்டதால், தன் நண்பர் பழனி, 58,யிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
பின், பழனியிடம் பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான 12 பேர், பழனியை கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்த போது, தண்டரை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சுதாகர் கூறியதன் அடிப்படையில் பணத்தை பெற்றதாக தெரிவித்தார். இதையடுத்து, மதியம் 2:00 மணிக்கு, லத்துார் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்த வி.ஏ.ஓ., சுதாகரையும் கைது செய்தனர்.