/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இடமாறுதல் கிடைக்காமல் தவிப்பு
/
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இடமாறுதல் கிடைக்காமல் தவிப்பு
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இடமாறுதல் கிடைக்காமல் தவிப்பு
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இடமாறுதல் கிடைக்காமல் தவிப்பு
ADDED : பிப் 06, 2025 10:22 PM
செங்கல்பட்டு:ஊரக வளர்ச்சித் துறையில், ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் உள்ளன.
இங்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் பணிபுரியும் ஊழியர்களை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, பணியிட மாற்றம் செய்வது வழக்கம்.
ஆனால் ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர், இளநிலை உதவியாளர்கள் நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, நீண்ட காலமாக பணியிட மாறுதல் வழங்கப்படாமல் உள்ளது. இதையடுத்து இத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தங்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென, கலெக்டர் அருண்ராஜிடம் மனு அளித்தனர்.
இந்த மனுக்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுத்து, ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிட்டார்.
ஆனால், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தி.மு.க., நிர்வாகிகள் தலையிட்டு, அலுவலர்களின் பணியிட மாறுதலை ரத்து செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணிபுரியும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் பலர், மன உளைச்சலில் உள்ளனர்.
மேலும், கூடுதல் பணிச் சுமையாலும் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், மாவட்டம் துவக்கப்பட்ட நாளிலிருந்து இதே அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறையில், சென்னைக்கு அருகில் உள்ள புனிததோமையார்மலை, திருப்போரூர், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியங்களில், சில குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மட்டும், சுழற்சி முறையில் பணியிட மாற்றம் வழங்கப்படுகின்றன.
மற்ற ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஒரே ஊராட்சி ஒன்றியத்திலேயே தொடர்ந்து பணிபுரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு, நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரிவோருக்கு இடமாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.