/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிற்பக்கலைஞர்கள் பெயர் பொறித்த குன்றுகள் புதர் சூழ்ந்து மறைப்பு
/
சிற்பக்கலைஞர்கள் பெயர் பொறித்த குன்றுகள் புதர் சூழ்ந்து மறைப்பு
சிற்பக்கலைஞர்கள் பெயர் பொறித்த குன்றுகள் புதர் சூழ்ந்து மறைப்பு
சிற்பக்கலைஞர்கள் பெயர் பொறித்த குன்றுகள் புதர் சூழ்ந்து மறைப்பு
ADDED : செப் 30, 2024 04:25 AM

மாமல்லபுரம் : கி.பி., 7- 8ம் நுாற்றாண்டு பல்லவர்கள், மாமல்லபுரத்தில் உள்ள பாறை குன்றுகளில், கலை நய சிற்பங்கள் படைத்துள்ளனர். பாறை வெட்டு கற்களில் கடற்கரை கோவில் கட்டியுள்ளனர்.
நீளமான பாறை குன்றில், வெவ்வேறு ரதங்கள் என, ஒற்றை கற்றளி வகை ஐந்து ரதங்கள், பாறை விளிம்பில் புடைக்கப்பட்ட அர்ஜுனன் தபசு, பாறையின் உட்புறம் குடையப்பட்ட பல குடைவரைகள் ஆகியவை, இங்கு உள்ளன.
அவற்றை உருவாக்கிய சிற்பக் கலைஞர்களின் பெயர், சிற்ப பாறைகளில் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக, இந்நகரின் மேற்கில், பூஞ்சேரி பகுதியில் உள்ள தரைமட்ட குன்றுகளில், அவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
நொண்டி வீரப்பன் தொட்டி என்றழைக்கப்படும், தொட்டி போன்ற குழியுடன் காணப்படும் இக்குன்றுகளில், கேவாத பெருந்தச்சன், குணமல்லன், பையமிழைப்பான், சாத்தமுக்கியன், கலியாணி, அபராஜன், கொல்லன், சீமோகன் ஆகியோரின் பெயர்கள், பழங்கால தமிழ், கிரந்தம் ஆகிய வடிவங்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
இக்குன்றுகளை பாதுகாக்க வேண்டிய தொல்லியல் துறை, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிட்ட நிலையில், குன்றுகள் உள்ள பகுதிக்கு கம்பி வேலி அமைத்து, புதரை அழித்தது.
தற்போது, மீண்டும் புதர் சூழ்ந்து, குன்றுகளை மறைத்துள்ளது. வரலாறு, கல்வெட்டியல் பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், அவ்வப்போது குன்றுகளை ஆய்வு செய்கின்றனர்.
புதர் சூழ்ந்துள்ள நிலையில், அவர்கள் குன்றுகளில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்களை காண சிரமப்படுகின்றனர். தொல்லியல் துறையினர், குன்று பகுதியை முறையாக பாதுகாத்து, புதர் சூழாமல் பராமரிக்க வேண்டும் என, ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

