/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.6 லட்சம் 'மெத்தாம்பெட்டமைன்' பறிமுதல்
/
ரூ.6 லட்சம் 'மெத்தாம்பெட்டமைன்' பறிமுதல்
ADDED : மார் 11, 2024 05:10 AM

அம்பத்துார் : ஒரகடம் அடுத்த புதுார், பானு நகரில், அம்பத்துார் தனிப்படை போலீசார், நேற்று அதிகாலை 2:00 மணி அளவில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த பகுதியின் ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 'ஹூண்டாய் சான்ட்ரோ' காரின் கதவுகள், சந்தேகத்திற்கு இடமான வகையில், அவ்வப்போது திறந்து மூடப்படுவதைக் கண்டறிந்தனர். உடனே, போலீசார் அந்த காரை சுற்றி வளைத்தனர்.
அதில் இருந்த வாலிபர்கள் இருவர், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பாபு, 25, ரமேஷ், 24, என்பது தெரிய வந்தது. காரை சோதனையிட்டதில், டிரைவர் சீட்டுக்கு அடியில் இருந்து, அழுக்கு துணியில் சுற்றப்பட்ட நிலையில், 21 சிறு சிறு பொட்டலங்கள் சிக்கின. அதை எடுத்து ஆய்வு செய்ததில், 'மெத்தாம்பெட்டமைன்' போதைப்பொருள் என்பது தெரிய வந்தது. மொத்தம் 200 கிராம் போதைப்பொருள் சிக்கியது.
அதீத போதைக்காக, சர்வதேச சந்தையில் விற்கப்படும், 'மெத்தாம்பெட்டமைன்' பெங்களூரில் இருந்து வாங்கி வந்து, 1 கிராம் 3,000 ரூபாய்க்கு விற்றது தெரிந்தது.
மேலும், அம்பத்துார், முகப்பேர், ஆவடி, திருவேற்காடு, போரூர் சுற்றுவட்டாரங்களில் உள்ள, தனியார் கல்லுாரி மாணவர்களை குறிவைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், போதைப்பொருள், கார், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

