/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., இடம் தேர்வு
/
அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., இடம் தேர்வு
அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., இடம் தேர்வு
அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., இடம் தேர்வு
ADDED : பிப் 13, 2024 10:02 PM

பவுஞ்சூர்:மதுராந்தகம் சப் - டிவிஷன் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அணைக்கட்டு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு, செய்யூர் காவல் நிலையத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, அணைக்கட்டு காவல் நிலையம் உருவாக்கப்பட்டது.
புதிய அரசு கட்டடம் எதுவும் காலியாக இல்லாததால், பவுஞ்சூர் பஜார் வீதியில் உள்ள பொதுப் பணித்துறைக்கு சொந்தமான பழைய குடியிருப்பு கட்டடத்தில் காவல் நிலையம் துவங்கப்பட்டது.
தற்போது வரை, அதே கட்டடத்தில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, தற்போது சப் -- இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் -- இன்ஸ்பெக்டர், பெண் காவலர் உட்பட 16 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கைதிகள் அறை, ஓய்வு அறை, ஆயுத தடவாளங்கள் அறை, சொத்துக்கள் வைப்பறை என, எந்தவித வசதியும் இல்லை.
குறிப்பாக, போதிய கழிப்பறை வசதி இல்லாமல் காவலர்கள் அவதிப்படுகின்றனர்.
அதனால், புதிய காவல் நிலையம் அமைக்க, சில மாதங்களுக்கு முன், பவுஞ்சூரில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது.
அந்த நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்ததால், நேற்று விழுதமங்கலம், ஜல்லிமேடு ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள ஒரு ஏக்கர் அளவுடைய அரசு புறம்போக்கு நிலத்தை, மதுராந்தகம் ஆர்.டி.ஓ., தியாகராஜன் மற்றும் மதுராந்தகம் டி.எஸ்.பி., சிவசக்தி இருவரும் ஆய்வு செய்தனர்.
மேலும், தற்போது காவல் நிலையம் செயல்பட்டு வரும் இடத்திற்கு அருகே, வேறு அரசு புறம்போக்கு இடம் உள்ளதா என, ஆய்வு செய்ய வருவாய்த் துறையினருக்கு டி.எஸ்.பி., அறிவுறுத்தி உள்ளார்.
வருவாய்த் துறை மூலமாக பரிந்துரை செய்யப்படும் இடத்தின் விபரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காவல் நிலைய எல்லைப் பகுதிகளின் மையப்பகுதி, போக்குவரத்து வசதி, இடவசதி போன்ற காரணிகளை அடிப்படையாக கொண்டு, அதில் தேர்வு செய்யப்படும் ஓர் இடத்தில் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

