/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாய மின் இணைப்புகளுக்கு தனி பாதை... எப்போது?:மூன்று ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டம்
/
விவசாய மின் இணைப்புகளுக்கு தனி பாதை... எப்போது?:மூன்று ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டம்
விவசாய மின் இணைப்புகளுக்கு தனி பாதை... எப்போது?:மூன்று ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டம்
விவசாய மின் இணைப்புகளுக்கு தனி பாதை... எப்போது?:மூன்று ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டம்
ADDED : ஜன 17, 2025 09:48 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயப் பணிகளுக்கு தனி மின் பாதைகள் அமைக்க, 136.56 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், இப்பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக துவக்கப்படமால், மாநில அரசு கிடப்பில் போட்டுள்ளது.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டுப்பாட்டில், செங்கல்பட்டு, அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், மறைமலை நகர், ஸ்ரீபெரும்புதுார், திருமழிசை ஆகிய மின் கோட்டங்கள் உள்ளன. இதன் கட்டுப்பாட்டில் உள்ள, வீடுகள், தொழிற்சாலைகள், விவசாய மின் இணைப்பு, அடுக்குமாடி குடியிப்புகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிறு தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
இந்த கோட்டங்களில், விவசாயம், வீடுகள் வர்த்தக நிறுவனங்களுக்கு, ஒரே இணைப்பில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில், வீடுகளுக்கு 24 மணி நேரமும், விவசாய பயன்பாட்டிற்கு 18 மணி நேரமும் மின் வினியோகம் செய்யப்படுகிறது.
மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாவில், அதிகமாக விவசாயம் நடக்கிறது. இப்பகுதி விவசாயிகள் பாலாற்று அருகாமையில் உள்ளவர்கள் ஆழ்த்துளை கிணறு, கிணற்று நீர் மற்றும் ஏரிபாசனம் வாயிலாக சம்பா பருவம், நவரை பருவம், சொர்ணவாரி பருவம் ஆகிய மூன்று பருவங்களில், நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
கோட்டங்களில், விவசாயம், வீடுள், வர்த்தக நிறுவனங்களுக்கு ஒரே இணைப்பில் மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால், மின் அழுத்த குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதனால், விவசாய கிணறு, ஆழ்துளை கிணறுகளில் உள்ள மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதடைகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வாக, விவசாயம் மற்றும் வீடுகளுக்கு தனித்தனியாக மின் பாதைகள் அமைக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகளிடம், விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ், ஊரகம் மற்றும் நகர பகுதிகளில் மின் பாதை இழப்பீட்டை குறைக்க, விவசாய மின் இணைப்புகள் அதிகம் உள்ள மின் பாதைகளை பிரித்து, விவசாய நிலங்களுக்கு தனியாக மின்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இரட்டை மின்மாற்றிகளை பிரித்தல், பழைய 33 கே.வி., வழித்தட மின்கம்பிகளை மாற்றுதல். அதிக பளு உள்ள உயர் அழுத்த மின் மாற்றிகளை பிரித்தல், புதிய மின் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள், இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளன.
கடந்த 2022-23 ம் ஆண்டு 31.71 கோடி ரூபாய், 2023- 24 ம் ஆண்டு 44.69 கோடி ரூபாய்; 2024-25 ம் ஆண்டு 60.14 கோடி ரூபாய் என, மொத்தம் 136.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இப்பணிகளுக்கு, டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் எடுத்தனர். அதன்பின், பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் நலன்கருதி, விவசாய நிலங்களுக்கு தனி மின்பாதை அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
விவசாய நிலங்களுக்கு தனி பாதை அமைத்து, மின் வினியோகம் செய்ய, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகள் துவங்க, தலைமை பொறியாளர் மற்றும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- மின்வாரிய அதிகாரிகள்
செங்கல்பட்டு மாவட்டம்.