/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலைகளில் பெருக்கெடுக்கும் கழிவுநீர் மாமல்லையில் சுற்றுலா பயணியர் அவதி
/
சாலைகளில் பெருக்கெடுக்கும் கழிவுநீர் மாமல்லையில் சுற்றுலா பயணியர் அவதி
சாலைகளில் பெருக்கெடுக்கும் கழிவுநீர் மாமல்லையில் சுற்றுலா பயணியர் அவதி
சாலைகளில் பெருக்கெடுக்கும் கழிவுநீர் மாமல்லையில் சுற்றுலா பயணியர் அவதி
ADDED : டிச 28, 2025 06:08 AM

மாமல்லபுரம்:சுற்றுலா களைகட்டும் மாமல்லபுரத்தில், சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து பாய்வதால், சுற்றுலா பயணியர் அவதிப்படுகின்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களை ரசிக்க, சுற்றுலா பயணியர் அதிக அளவில் வருகின்றனர்.
தற்போது இந்திய நாட்டிய விழா, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, சர்வதேச பயணியர் வருகையால், சுற்றுலா களைகட்டுகிறது.
இத்துடன் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என, பயணியர் தொடர்ந்து படையெடுப்பர்.
இச்சூழலில், பயணியர் கடந்து செல்லும் பிரதான சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து பாய்வதால் சிரமப்படுகின்றனர். முந்தைய பேரூராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை அமைத்து வீடுகள், விடுதிகள் உள்ளிட்டவற்றுக்கு இணைப்பு வழங்கியது.
இதை அமைத்த, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், முறையாகவோ, தரமாகவோ அமைக்கவில்லை.
இதனால், ஆரம்பம் முதல் தற்போது வரை, நிலத்தடியில் பதிக்கப்பட்ட கழிவுநீர் குழாய்கள் உடைந்தும், அடைப்பு ஏற்பட்டும், மூடி வழியே கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்குகிறது.
மாமல்லபுரம் கிழக்கு ராஜ வீதி, திருக்குள தெரு, ஒற்றைவாடை தெரு, கோவளம் சாலை உள்ளிட்ட பகுதிகளில், கழிவுநீர் சாலையில் பாய்கிறது.
குறிப்பாக, நாட்டிய விழா நடக்கும் கடற்கரை கோவில் அருகில், திருக்குள தெரு சந்திப்பு பகுதியில் கழிவுநீர் பாய்வதால், சுற்றுலா பயணியர் கழிவுநீரில் நடந்து சென்றும், துர்நாற்றத்தாலும் சிரமப்படுகின்றனர்.
கொசு உற்பத்தி அதிகரித்து, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரம் சுற்றுலா பகுதியின் சுகாதார சீர்கேடு குறித்து, சர்வதேச பயணியரும் கேள்வி எழுப்புகின்றனர்.
நாட்டிய விழா நடப்பதை முன்னிட்டு, இப்பகுதியை சுகாதாரமாக பராமரிக்க வேண்டுமென, கலெக்டர் சினேகா அறிவுறுத்தினார். ஆனால் நகராட்சி மற்றும் சுற்றுலா துறைகள் அலட்சியமாக உள்ளன.
மாமல்லபுரம் தற்போது நகராட்சியாக தரம் உயர்ந்த பிறகும் நிர்வாக செயல்பாடு, சுற்றுலா பகுதி பராமரிப்பில் அலட்சியமே நீடிக்கிறது.
அத்துடன், அவசியமற்ற பணிகளுக்கு நகராட்சி நிர்வாகம் அதிக நிதி ஒதுக்குவதாகவும், சுற்றுலா ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, சுற்றுலா புகழ் வாய்ந்த மாமல்லபுரம் கழிவுநீர் பாயும் பிரச்னைக்கு, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

