/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஷேர் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவியர் காயம்
/
ஷேர் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவியர் காயம்
ADDED : அக் 26, 2024 08:57 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம், அரசு உயர்நிலைப் பள்ளியில், நந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா, 15, அனுஷ்கா, 14, மிர்திகா, 17, சிவபிரியா, 13, பிரியங்கா, 15, திருக்கழுக்குன்றம் அடுத்த புலிகுன்றத்தைச் சேர்ந்த ரித்திகா, 14, காவியா, 14, ஆகியோர், 10ம் வகுப்பு படிக்கின்றனர்.
திருப்போரூர் தண்டலத்தில் உள்ள தனியார் மையத்தில் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்றவர்கள், நேற்று மாலை ஷேர் ஆட்டோவில் மாமல்லபுரம், பூஞ்சேரி சந்திப்பு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
ஆட்டோ ஓட்டுனர் கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. பண்டிதமேடு பேருந்து நிறுத்தம் அருகே, நிலைதடுமாறிய ஆட்டோ, சாலையோரம் கவிழ்ந்தது.
இதில், மாணவியருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. கார்த்திகாவிற்கு இடது காலில் காயம் ஏற்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள், மாமல்லபுரம், திருப்போரூர் அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, கார்த்திகாவின் உறவினர் கார்த்திக், மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, ஆட்டோவுடன் தலைமறைவான ஓட்டுனரை தேடி வருகின்றனர்.