/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவிலில் குற்றங்கள், நெரிசல்...அதிகரிப்பு!: காவல் நிலையம் அமைப்பதில் தொடரும் இழுபறி
/
சிங்கபெருமாள் கோவிலில் குற்றங்கள், நெரிசல்...அதிகரிப்பு!: காவல் நிலையம் அமைப்பதில் தொடரும் இழுபறி
சிங்கபெருமாள் கோவிலில் குற்றங்கள், நெரிசல்...அதிகரிப்பு!: காவல் நிலையம் அமைப்பதில் தொடரும் இழுபறி
சிங்கபெருமாள் கோவிலில் குற்றங்கள், நெரிசல்...அதிகரிப்பு!: காவல் நிலையம் அமைப்பதில் தொடரும் இழுபறி
ADDED : அக் 12, 2024 11:01 PM
செங்கல்பட்டு:சிங்கபெருமாள் கோவிலில், புதிய காவல் நிலையம் திறக்க அரசு உத்தரவிட்டு, ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, குற்றச்சம்பங்கள் அதிகரித்துள்ளன. எனவே, காவல் நிலையம் திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, புகழ்பெற்ற பாடலாத்திரி நரசிம்மபெருமாள் கோவில், ரயில் நிலையம் மற்றும் குடியிருப்புகள், தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், வணிக வளாகம், கடைகள் உள்ளன.
இந்த ஊராட்சியில், மகேந்திரா வேர்ல்ட்டு சிட்டி, மறைமலை நகர், ஒரகடம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், வாடகை வீடுகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
ரயில்வே கடவுப்பாதை மூடும்போது, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அப்போது, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தகவலறிந்து, மறைமலைநகர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார், போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், விடுமுறை, திருமணம் உள்ளிட்ட நாட்களில், தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அதிகமாக செல்லும்போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதேபோல், சென்னை திரும்பும்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, சிங்கபெருமாள் கோவில் பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன், தி.மு.க., - அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் ரவுடிகள் கொலை என, 25க்கும் மேற்பட்ட கொலை சம்பங்கள் நடந்துள்ளன.
சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில், தினமும் வாகன திருட்டு மற்றும் வீடு புகுந்து திருட்டு, பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடக்கின்றன.
இப்பகுதி வாசிகள் 7 கி.மீ., தொலைவில் உள்ள மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளதால், கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இப்பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் குற்ற வழக்குகளை கருத்தில் கொண்டு, சிங்கபெருமாள் கோவில் பகுதியில், காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் உள்ள மறைமலைநகர் காவல் நிலையத்தை பிரித்து, சிங்கபெருமாள் கோவிலில் புதிய காவல் நிலையம் அமைக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி உத்தரவிட்டார்.
ஆனால், ஓராண்டாகியும் புதிய காவல் நிலையம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, குற்றச்சம்பவங்கள் நடைபெறமால் இருக்க, புதிய காவல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.