/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூரில் திடக்கழிவு மேலாண்மை கூடம் அமைக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
/
செய்யூரில் திடக்கழிவு மேலாண்மை கூடம் அமைக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
செய்யூரில் திடக்கழிவு மேலாண்மை கூடம் அமைக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
செய்யூரில் திடக்கழிவு மேலாண்மை கூடம் அமைக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 23, 2025 02:01 AM

செய்யூர்:செய்யூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரிக்க, திடக்கழிவு மேலாண்மைக் கூடம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றாக, செய்யூர் ஊராட்சி உள்ளது. இங்கு 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட தேவராஜபுரம், பாளையர்மடம், புத்துார் உள்ளிட்ட கிராமங்களில் குப்பை அதிகம் தேங்கும் இடங்களில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் தேங்கும் குப்பை, துாய்மை பணியாளர்கள் வாயிலாக அகற்றப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து, துாய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தி வருகிறது.
மட்காத குப்பையில் இருந்து மறு சுழற்சிக்குத் தேவையான பொருட்களை பிரித்தெடுக்கவும், மட்கும் குப்பையிலிருந்து இயற்கை உரங்கள் தயாரிக்கவும், துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், பொதுமக்கள் குப்பையை தரம் பிரித்து வழங்குவதில்லை. ஊராட்சியிலும், முறையான திடக்கழிவு மேலாண்மைக் கூடம் இல்லை. இதனால், சேகரிக்கப்படும் அனைத்து குப்பையும் தரம் பிரிக்கப்படாமல், செய்யூரில் இருந்து எல்லையம்மன் கோவில் செல்லும் சாலையோரத்தில் கொட்டப்படுகிறது.
இதில் அதிகமாக உள்ள பிளாஸ்டிக் பைகள், காற்றில் பறந்து செல்கின்றன. மழைக்காலங்களில் குப்பை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகள் மாசடைகின்றன.
மேலும் குப்பையை ஆடு, மாடு போன்ற கால்நடைகள் உண்பதால், பிளாஸ்டிக் பைகள் அவற்றின் குடலில் சிக்கி கால்நடைகள் உயிரிழக்கின்றன.
எனவே, மாவட்ட நிர்வாகம் செய்யூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக் கூடம் அமைத்து, குப்பையை தரம் பிரிக்க வேண்டும். அத்துடன், குப்பையிலிருந்து மண் புழு உரம் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.