/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் பெண்கள் சிறை அமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
/
செங்கையில் பெண்கள் சிறை அமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கையில் பெண்கள் சிறை அமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கையில் பெண்கள் சிறை அமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 14, 2025 11:51 PM

செங்கல்பட்டு, செங்கல்பட்டில், பெண்கள் கிளைச் சிறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
செங்கல்பட்டில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், மாவட்ட சிறை உள்ளது. இந்த சிறையை, 2016ம் ஆண்டு, பிப்., 25ம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
அதே ஆண்டு, பெண்கள் கிளைச் சிறை திறக்க உத்தரவிடப்பட்டது. இதற்காக, மாவட்ட சிறை வளாகத்தில், பெண்களுக்கான கிளைச் சிறைக்கு தனி கட்டடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், பெண்கள் சிறையை திறக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட சிறையில், 235 கைதிகளை அடைக்கும் இடவசதி உள்ளது.
செங்கல்பட்டு காவல் மாவட்ட கட்டுப்பாட்டில் உள்ள, 20 காவல் நிலையங்கள், மூன்று அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, கேளம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில், சிறு வழக்குகள் முதல் கொலை வழக்குகள் வரை கைது செய்யப்படுவோர், இந்த சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இதில், வழக்கு தொடர்பாக பெண்களை கைது செய்யும் போது சென்னை, புழல் சிறைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதேபோன்று, வழக்கு தொடர்பாக பெண் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவதற்கு, மீண்டும் புழல் சிறைக்குச் செல்ல வேண்டி உள்ளது.
இதனால் போலீசாருக்கு கால விரயம் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி, பாதுகாப்பு கேள்விக்குறியான சூழல் உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட சிறை வளாகத்தில் பெண்கள் சிறை இருந்தால், மாவட்டத்தில் கைது செய்யப்படும் பெண்களை இந்த சிறையில் அடைக்கவும், நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லவும் வசதியாக இருக்கும்.
எனவே, செங்கல்பட்டு மாவட்ட சிறை வளாகத்தில், பெண்கள் கிளைச் சிறை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட சிறையில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி உள்ளதை சீரமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் கட்டடத்திற்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
- மாவட்ட சிறைத்துறை போலீசார்